திருச்சியில் அரியாற்றில் மேலும் இரு இடங்களில் உடைப்பு: போக்குவரத்து மாற்றம்

திருச்சி புங்கனூர் பகுதியில் அரியாற்றில் ஏற்கெனவே  உடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் அடுத்தடுத்து இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி மாநகரப் பகுதிகளில் மீண்டும்  வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருச்சி, புங்கனூர் பகுதியில் அரியாற்றுக் கரையில், ஏற்கனவே அந்த இடத்தில், திங்கள் கிழமை  மீண்டும் ஏற்பட்ட  உடைப்பு.
திருச்சி, புங்கனூர் பகுதியில் அரியாற்றுக் கரையில், ஏற்கனவே அந்த இடத்தில், திங்கள் கிழமை மீண்டும் ஏற்பட்ட உடைப்பு.

திருச்சி: திருச்சி புங்கனூர் பகுதியில் அரியாற்றில் ஏற்கெனவே  உடைப்பு ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் அடுத்தடுத்து இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி மாநகரப் பகுதிகளில் மீண்டும்  வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திங்கள்கிழமை காலை மணப்பாறையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக, உபரி நீர் வடிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாறு வழியாக திருச்சி நோக்கி வந்தது. இதில் புங்கனூர் பகுதியில் ஏற்கெனவே கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் (கரையில் மண் கொட்டி, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம்)  மீண்டும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் வெளியேறியது.

இதன் காரணமாக புங்கனூர், இனியானூர், வலம்புரி நகர், ஆண்டாள் நகர்,   பிராட்டியூரின் சில பகுதிகள், வர்மாநகர், கணேசா நகர், முருகன் நகர், தீரன் நகரின் நுழைவாயிலையொட்டிய பகுதிகளில் அரியாற்று வெள்ளநீர் முற்றிலுமாக சூழ்ந்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு சுமார் 200 மீட்டர் தொலைவில் மற்றுமொரு இடத்திலும் அரியாற்றுக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் அதிகளவு வெள்ள நீர் வெளியேறி, குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.    

போக்குவரத்து மாற்றம்:

திருச்சி - திண்டுக்கல் பிரதான  சாலையைக் கடந்து, ஆக்ஸ்போர்டு கல்லூரிப் பகுதியில், சுமார் 1 முதல் 2 அடி உயரத்துக்கு வெள்ளநீர் குடியிருப்புகள் வணிக வளாகங்கள் வழியாக கோரையாறு நோக்கி பாய்ந்து வடிந்து செல்கிறது. இதன் காரணமாக திருச்சி - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

திருச்சி மணப்பாறை சாலையில், தீரன் நகர் பிராட்டியூர்  இடையே சாலையில் வழிந்து செல்லும் மழை வெள்ளத்தை கடந்து செல்லும் வாகனங்கள்.
திருச்சி மணப்பாறை சாலையில், தீரன் நகர் பிராட்டியூர்  இடையே சாலையில் வழிந்து செல்லும் மழை வெள்ளத்தை கடந்து செல்லும் வாகனங்கள்.

திண்டுக்கல் மற்றும் மணப்பாறையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள், ராம்ஜி நகர் மற்றும் வண்ணாங்கோயிலிலிருந்து பிரிந்து செல்லும் சாலைகளில் சென்று, மணிகண்டம் பகுதியில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சியை வந்தடைகின்றன. திருச்சியிலிருந்து செல்லும் வாகனங்கள் தீரன் நகர் பகுதியில் சாலையில் வழிந்து செல்லும் வெள்ள நீரை மெதுவாக கடந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இயக்கப்பட்டன.  மீண்டும் மழை நீடிக்கும் நிலையில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வெள்ள நீர் வரத்து அதிகரித்தால் அரியாற்றில் மற்றொரு கரையிலும் இரு இடங்களில் உடையும் வகையில் பலவீனமான இடங்கள் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடைப்பு தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் முன்னேற்பாடு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com