

திருச்சி: திருச்சி, திருவெறும்பூர் பெல் நிறுவன மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ளது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம். இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில், பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் பெல் நிர்வாகத்தின் கீழும், சிலர் ஒப்பந்த ஊழியர்களாகவும் இரு பிரிவாக பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் சுமார் 150 பேர் நர்ஸ், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் ஊழியர்கள் பல முறை கேட்டும் உரிய ஊதியம் கிடைக்கவில்லையாம்.
இதனையடுத்து ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பதாகைகளை ஏந்தி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு பெல் நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் பிரதிமாதம் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஊழியர்களிடம் வெற்று செக்கில் கையெழுத்து வாங்க கூடாது. ஒப்பந்த ஊழியர்களை பெல் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெல் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.