திருச்சியில் பெண்ணைக் குத்திக் கொன்று வங்கி ஊழியர் தற்கொலை
By DIN | Published On : 14th July 2022 04:43 PM | Last Updated : 14th July 2022 06:46 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சியில் பெண்ணை கத்தியால் குத்தி, கொலை செய்த வங்கி ஊழியர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி பொன்மலை, மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளார்.
அதே பகுதி (மேல கல்கண்டார் கோட்டை) பழைய அய்யனார் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (36). இவர் தனியார் வங்கி ஊழியர் ஆவார்.
வினோத்குமாருக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக திருமணத்தை கடந்த உறவு இருந்து வந்துள்ளது. எனவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை புவனேஸ்வரியின் வீட்டிற்கு வினோத்குமார் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், புவனேஸ்வரியை கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
இதையும் படிக்க: புதுச்சேரியில் விபத்து: தந்தை கண்முன்னே மகன் பலி
அங்கிருந்து தப்பி ஓடிய வினோத்குமார், பழைய மஞ்சள் திடல் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் வந்துள்ளது. அப்போது, அவர் திடீரென தண்டவாளத்தில் படுத்துள்ளார்.
இதில் அவரது உடல் துண்டாகி வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொன்மலை காவல் துறையினர் இரு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொன்மலை காவல் துறையினர் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை துணை ஆணையர் ஸ்ரீதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.