திருச்சியில் இளைஞர் அடித்துக் கொலை
By DIN | Published On : 07th September 2022 11:53 AM | Last Updated : 07th September 2022 03:28 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மன்னார்புரம் அருகே இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை கொலையுண்டு கிடந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரசாமி மகன் பாஸ்கர் (28). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
தினசரி பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு மன்னார்புரம் வந்து, அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து நிறுவன வாகனம் (வேன்) மூலம் பணிக்கு சென்று, மீண்டும் நிறுவன வாகனத்தில் மன்னார்புரம் வந்து, இறங்கி மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்து வீடு செல்வது வழக்கம்.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் மன்னச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே ராணுவ மைதானத்திற்கு அருகில் சாலையோரம் ஒரு உடல் கிடப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இறந்து கிடந்தது பாஸ்கர் என தெரியவந்தது. அவரது தலையில் கட்டை அல்லது கல்லால் அடிபட்ட நிலையில் காயமடைந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிக்க: அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு
இதனை அடுத்து கே.கே.நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன பாஸ்கரின் தந்தை குமாரசாமி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகும் பலமுறை காவல் துறைக்கு புகார் வந்துள்ளது இந்நிலையில் தற்போது அந்த பகுதியில் கொலை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.