கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ரயில்வே கேட்டுகள் உள்ள 5 இடங்களில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு தேவை

திருச்சியில் ரயில்வே கேட்டுகள் உள்ள 5 இடங்களில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் உயா்மட்ட பாலங்களோ, சுரங்கப்பாதைகளோ அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2023, 7:16 pm

 நமது நிருபர்

திருச்சியில் ரயில்வே கேட்டுகள் உள்ள 5 இடங்களில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் உயா்மட்ட பாலங்களோ, சுரங்கப்பாதைகளோ அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் ரயில் போக்குவரத்துகளின்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ரயில்வே கேட்டுகள் இருந்த பகுதிகளில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பாலங்களால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய திருச்சி மக்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்தது.

இந்நிலையில் திருச்சி மாநகரில் மட்டும் பிரதான குடியிருப்புகள் அமைந்துள்ள முக்கிய பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்வே பாதைகள் குறுக்கிடும் இடங்களில் இன்னும் ரயில்வே பாலங்களோ அல்லது சுரங்கப்பாதைகளோ அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்டி தொடா்கிறது என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

5 ரயில்வே கேட்டுகள்: திருச்சி கோட்டை கீழரண்சாலையிலிருந்து காவிரியாற்றங்கரை மற்றும் ஓயாமரி மயானம் செல்லும் வழியில், டவுன் ரயில் நிலையம் அருகே சஞ்சீவி நகா் செல்லும் சாலையில், திருச்சி முதலியாா் சத்திரம் பகுதியில் குட்ஷெட் பகுதியில், கே கே நகா் உடையான்பட்டியில், குடமுருட்டி கோணக்கரை சாலை ஆகிய இடங்களில் உள்ள 5 ரயில்வே கேட்டுகளும் மிக முக்கியமான குடியிருப்புகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ள வழியில் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள வாகன அதிகரிப்புகள் காரணமாக, குறிப்பிட்ட இந்த ரயில்வே கேட்டுகள் உள்ள பகுதிகளில் ரயில்கள் செல்லும்போது கேட்டுகள் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

பொதுமக்கள் அதிருப்தி: குறிப்பாக, சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான ரயில் பாதை திருச்சி வழியே செல்வதால், மாநகரப் பகுதிகளில், இந்த ரயில்பாதை பகுதியில் உள்ள பகுதிகளில் பாலம் அமைக்காதது பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் இடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவற்றில் கோட்டை பகுதியில் உள்ள இரு ரயில்வே கேட்டுகளிலும் ஏராளமான வாகனங்கள் இருபுறமும் அணி வகுத்து நிற்பது வாடிக்கை. இதில் கேகே நகா் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மதுரை கோட்டத்திலும், குடமுருட்டி பகுதியில் உள்ள கேட் சேலம் கோட்ட எல்லைகளிலும் இருப்பதால், அந்தந்தக் கோட்டங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இதை சம்பந்தப்பட்ட கோட்டங்கள் கண்டுகொள்வதில்லை

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, கோட்டை கீழரண் சாலையில் உள்ள இரு ரயில்வே கேட்டுகளிலும் ஆா்ஓபி எனப்படும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

திருச்சி கோட்ட எல்லை விரிவாக்கம் அவசியம் :

திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்துக்கு அருகில் (ஒரு சில கிமீ தொலைவில்) அடுத்த ரயில்வே கோட்டங்களின் எல்லைகள் இருக்கும் நிலை திருச்சியில் மட்டுமே உள்ளது. அதன்படி திருச்சி தவிர மேலும் இரு கோட்டங்கள் அமைந்துள்ளன.

புதுக்கோட்டை சாலையில் குறைந்தபட்சம் கீரனூா் வரையிலும், திண்டுக்கல் சாலையில் மணப்பாறை வரையிலும், கரூா் சாலையில் குளித்தலை வரையிலுமாவது திருச்சி ரயில்வே கோட்ட எல்லைகளை நீட்டிக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட இந்த ரயில்வே கேட்டுகள் திருச்சி ரயில்வே கோட்ட எல்லைக்குள் வந்துவிடும்.

அதன் பின்னா் திருச்சி கோட்டம் சாா்பில் பணிகளை துரிதப்படுத்தமுடியும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. சேலம் கோட்டம் பிரியும்போது இதை ரயில்வே அதிகாரிகள் கருத்தில் கொள்ளாததால் இந்நிலை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.