வைரம்பட்டியில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
By DIN | Published On : 10th September 2023 01:45 PM | Last Updated : 10th September 2023 01:45 PM | அ+அ அ- |

வைரம்பட்டியில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு சுற்று பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வைரம்பட்டியில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கோட்டகரை முனியப்பன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தேக்கமலையான், ஸ்ரீ பாலதண்டாயுதபானி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 2017-ல் நடைபெற்ற திருவிழாவிற்கு பின் சில பிரச்னைகளால் திருவிழா நடத்தமுடியவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு ஆவணி மாதம் சுற்று பொங்கல் திருவிழா நடத்துவதாக ஊர் பொதுமக்களால் ஒன்றுகூடி முடிவெடுக்கப்பட்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி இன்று காலை வையம்பட்டியில் உள்ள கரக மரத்திலிருந்து பொங்கல் பொருட்களை கூடைகளில் வைத்து, அந்த கூடைகளை தங்களது தலைகளில் சுமந்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஆலயம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
வான வேடிக்கை, பட்டாசு வெடித்து தாரைத்தப்பட்டைகளுடன் பொங்கல் கூடைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தது. அங்கு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஊர் முக்கியஸ்தர்கள் பொங்கல் வைப்பதை தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் பொங்கல் வைக்க தொடங்கினர்.
பொங்கல் கிழக்கு முகமாக பொங்கியது பொங்கலிட்ட பெண்கள் குலவை அடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஸ்ரீ கோட்டகரை முனியப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் கிடா வெட்டுதல் நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் மகிழ்ச்சியுடன் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.