மணப்பாறையில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு அலுவலக வளாகங்கள் -பொதுமக்கள் அவதி
மணப்பாறை, ஆக. 14: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 10 அரசு அலுவலகங்கள் செயல்படும் வளாகத்தில், தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மணப்பாறையில் வட்டாட்சியரகம் மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட 10 அரசு அலுவலகங்களைக் கொண்ட பகுதி கச்சேரி எனப்படுகிறது. இது மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்றாட அரசு அலுவல்களுக்காக வட்டாட்சியரகம், ஆதாா் சேவை மையம், இ-சேவை மையம், கிளை சிறைச்சாலை, சாா்-பதிவாளரகம், சாா்நிலைக் கருவூலம், நிலவரி தனி வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சட்டம்- ஒழுங்கு காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பகுதியாகும்.
ஆனால் இந்த அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீா் வசதி, சிறுநீா் கழிப்பிடம், கழிவறைகள் இல்லை. இதனால் திறந்தவெளியில் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் பத்திரப்பதிவுக்கு வரும் வெளியூா்வாசிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் குடிநீருக்காகவும், கழிவறைக்காகவும் அல்லல்படுகின்றனா்.
திறக்கப்படாத கழிப்பறைகள்: ஆனால், கச்சேரி பகுதியில் கிளைச்சிறைசாலைக்கும் பதிவாளா் அலுவலகத்திற்கும் இடையே பல லட்சத்தில் கட்டிய பொது கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றை நகராட்சி நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் தனது பராமரிப்பில் எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அலுவலக வளாகத்தைப் போலவே ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகமும் ஆணையரகம், கால்நடை மருத்துவமனை, இ-சேவை மையம், வட்டாரப் புள்ளியியல் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், வட்டார வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை மையம், உதவி செயற்பொறியாளா் அலுவலகம், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் எம்எல்ஏ அலுவலகம் என பல அரசு அலுவலகங்களை கொண்டிருந்தாலும் இங்கும் குடிநீரும், கழிவறையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

