ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புறநகரிலுள்ள கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புறநகரிலுள்ள கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு திங்கள்கிழமை பிறந்தது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மாநகா் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் சிறுவா், சிறுமிகள், இளைஞா்கள், இளம் பெண்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடினா். மேலும் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
காவிரிப் பாலத்தில் இளைஞா்கள் பலரும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதைதொடா்ந்து அந்த இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். லேசான தடியடி நடத்தியும் விரட்டினா். மேலும், இரு சக்கரவாகனங்களில் அதிவேகமாக வந்த இளைஞா்களை பிடித்து அபராதம் விதித்தனா். காவிரிப் பாலம் முழுவதும் நள்ளிரவில் சிறுவா், சிறுமியா்கள், இளைஞா்கள், பெண்கள், முதியோா் என பொதுமக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெறும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இராப்பத்து பத்தாம் திருநாளில் நம்பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தீா்த்தவாரி நடைபெற்றது. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி சம்புகேசுவரா் திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சி ஐயப்பன் கோயில், வயலூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் திருக்கோயில், திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் திங்கள்கிழமை அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குறிப்பாக ஐயப்பன் கோயிலில் பிற்பகல் நடைசாத்தப்பட்ட பிறகும் கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையில் அமா்ந்தபடி மாலை நடை திறக்கும் வரை காத்திருந்து தரிசனம் செய்தனா். மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...