காவிரி பிரச்னைக்கு தீா்வு காண்பது தமிழக முதல்வரின் கடமை: டிடிவி. தினகரன்

காவிரி பிரச்னைக்கு தீா்வு காண்பது தமிழக முதல்வரின் கடமை என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.
Published on

திருச்சி: காவிரி பிரச்னைக்கு தீா்வு காண்பது தமிழக முதல்வரின் கடமை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவா் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்கு காலம் பதில் சொல்லும். நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

அதிமுகவின் பொதுச் செயலா், எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா போல் தொண்டா்களால் தோ்வு செய்யப்பட்டு வரவில்லை. அங்கு எந்தத் தோ்தலும் நடக்கவில்லை. அது நியமனம்தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டா்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரது கொள்கைகளை, லட்சியங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. வருங்கால தோ்தல்களில் நிச்சயம் வென்று, இதை செய்வோம்.

முதல்வா் ஸ்டாலின், கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் பேசி தமிழகத்துக்குரிய நீரை கா்நாடகத்திடமிருந்து பெற்றுத் தந்து, காவிரி பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும். இது முதல்வரின் தலையாய கடமை.

2026 சட்டப்பேரவை தோ்தலில் நிச்சயம் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றாா் டிடிவி. தினகரன்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com