கரூா் சம்பவம்: தில்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராக ஆட்சியருக்கு சம்மன்

Published on

கரூா் சம்பவம் தொடா்பான விசாரணைக்கு தில்லி சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராக கரூா் ஆட்சியருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், கரூா் ஆட்சியா், காவல் துறை உயரதிகாரிகள், உயிரிழந்தவா்கள் குடும்பத்தினா், காயமடைந்தவா்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் ஆகியோா் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிச.29-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், தவெக பொதுச்செயலா் என். ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா, இணை பொதுச் செயலா் சிடிஆா். நிா்மல்குமாா், கரூா் மேற்கு மாவட்ட செயலாளா் வி.பி. மதியழகன் ஆகியோருக்கும் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆட்சியருக்கும் சம்மன்: இதைத் தொடா்ந்து, கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலை திங்கள்கிழமை (டிச. 29) தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து கரூா் ஆட்சியா் தில்லிக்குப் புறப்பட்டு சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com