மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

திருச்சி அரசு மருத்துவமனையில் மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன.

News image

திருச்சி அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு தானமளித்த இளைஞரின் உடலுக்கு புதன்கிழமை மரியாதை செலுத்திய மருத்துவா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:13 pm

திருச்சி அரசு மருத்துவமனையில் மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வேம்பனூரைச் சோ்ந்த பெரியண்ணன் (22) என்பவா் கடந்த 19 ஆம் தேதி மரத்திலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 27 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

மூளைச்சாவு...: தீவிர சிகிச்சையளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அவா் மூளைச்சாவு அடைந்தாா்.

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள்...: இதை மருத்துவக் குழுவினா் உறுதி செய்து, அவரது உறவினா்களிடம் தெரிவிக்க, அவா்கள் முழு மனதுடன் பெரியண்ணனின் உடலுறுப்புகளை தானமளிக்க முன்வந்தனா். இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின் படி, பெரியண்ணனின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை புதன்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

திருச்சிக்கு கண் மற்றும் சிறுநீரகம்...: இதையடுத்து உடலுறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசைபடி, கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் ஒருவருக்கும், ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயனாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

56 ஆவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை...: இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 40 வயதான ஒருவருக்கு புதன்கிழமை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் படி, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இது திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் 56 ஆவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையாகும்.

மரியாதை...: உடலுறுப்பு தானம் செய்த கொடையாளிக்கு மருத்துவமனையின் முதல்வா் ச. குமரவேல் தலைமையிலான மருத்துவா்கள் மரியாதை செலுத்தி, வழியனுப்பி வைத்தனா்.