உளுந்து சாகுபடி வயல்.
உளுந்து சாகுபடி வயல்.கோப்புப்படம்.

திருச்சி மாவட்டத்தில் 180 டன் உளுந்து கொள்முதல் இலக்கு

மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் மூலம், திருச்சி மாவட்டத்தில் 180 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் மூலம், திருச்சி மாவட்டத்தில் 180 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2025-2026 ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் விளைவிக்கப்பட்ட உளுந்து பயிரை மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்ட தரமான உளுந்து ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 7,800 வழங்கப்படுகிறது. இத்திட்டம் மத்திய அரசின் கொள்முதல் முகமை மூலம் செயல்படுகிறது. லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரும் 25.03.2026 வரை கொள்முதல் நடைபெறும்.

திருச்சி மாவட்டத்துக்கு 180 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு 214 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் விற்கும் உளுந்துக்கான தொகை நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விவசாயிகள் உளுந்தை தரமாக உலர வைத்து அயல் பொருட்கள் 2 சதவீதம், கலப்பினம் 3 சதவீதம், அதிகம் சேதமடைந்த பயறுகள் 3 சதவீதம், குறைந்த சேதமடைந்த பயறுகள் 4 சதவீதம், முதிா்வடையாத பயறுகள் 3 சதவீதம், வண்டுகள், பூச்சிகள் தாக்கிய பயறுகள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 12 சதவீதம் என அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பு (சதவீத எடை அளவு குவிண்டாலுக்கு) நிா்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களுடன் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்துவந்து பயன் பெறலாம்.

இதற்கான முன்பதிவுக்கு சிட்டா, அடங்கல், ஆதாா் நகல் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளரை 94894 82122 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம்.

அரசின் இத்திட்டத்தை உளுந்து சாகுபடி செய்யும் லால்குடி சுற்று வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com