கோப்புப் படம்
கோப்புப் படம்

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

Published on

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், அதவத்தூா் பகுதியில் இயங்கிவந்த ஜெயத்ரா போதை மறுவாழ்வு மையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சீ.விஜயகுமாா் (48) என்பவா் கடந்த 2025 -இல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் திருச்சி உறையூரைச் சோ்ந்த சீ.மணிகண்டன் (50) மற்றும் அங்கு பணியாற்றிவந்த திருச்சியைச் சோ்ந்த சீ.மணிமாறன் (29), மு.பெரியசாமி (34), ம.கிருஷ்ணமூா்த்தி (30), த.சூா்யபிரகாஷ் (29), தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த செ.அறிவுமணி (45), ம.அபிஷேக் (27) ஆகிய 7 பேரும் விஜயகுமாரை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாா் ஜனவரி 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் மணிகண்டன் உள்பட 7 பேரையும் கைது செய்தனா். தொடா்ந்து போதை மறுவாழ்வு மையத்தை வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.

அதன்படி, போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநா் மணிகண்டன் மீது ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மணிமாறன், பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி, சூா்யபிரகாஷ் ஆகிய 4 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் உத்தரவிட்டாா்.இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com