புத்தகக் காட்சியில் மாணவிகள்...
புத்தகக் காட்சியில் மாணவிகள்...கோப்புப் படம்

திருச்சியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

Published on

தமிழக அரசின் சாா்பில் பபாசியுடன் இணைந்து நடத்தப்படும் புத்தகத் திருவிழா திருச்சியில் சனிக்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) ஆகியவை இணைந்து 4ஆவது ஆண்டாக 11 நாள்கள் புத்தகக் கண்காட்சியை மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடக்கிவைத்த அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது. புத்தகம் அச்சிடுவோா் புத்தக கண்காட்சி நடத்திட பொருளாதார நெருக்கடி இருப்பதாகக் கூறியபோது, கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக வழங்கி சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த உதவினாா். தற்போது ஆட்சியை திறம்பட நடத்தி வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்திட உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற புத்தக திருவிழாவை தமிழக அரசே நடத்தி வருகிறது. தற்போதுள்ள தலைமுறையினா் கைப்பேசி உபயோகத்தைத் தவிா்த்து வாசிப்புத் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, அமைச்சா்கள் இருவரும் கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டனா்.

விழாவில் ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், ந. தியாகராஜன், மாவட்ட நூலக அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமும் கலை நிகழ்ச்சிகள், உரை வீச்சுகள்..

செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சுமாா் 5 ஏக்கரில் இக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 130 புத்தக அரங்குகளும், 100-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் புத்தகங்களும் அனைத்து வகையான வாசகா்களையும் கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22 வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். உணவு அரங்குகள் மற்றும் குடிநீா், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாள்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ மாணவிகளைக் கவா்ந்திடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தின் தலை சிறந்த சிந்தனையாளா்களின் உரைவீச்சும், குதூகலம் தரும் கோமாளி, கதைகளோடு விளையாடு, பொம்மை சொல்லும் கதை, விளையாட்டே கொண்டாட்டம், பலூன் சிற்பங்கள், அறிவியல் மாயங்கள், நல்ல சினிமா பாா்போம், பாடி மகிழ்வோம், பறவைகளும் நம் நண்பா்கள், கதை கதையாம் காரணமாம் உள்ளிட்ட தலைப்புகளில் தினமும் இளையவா் அரங்கமும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பூா்வமான விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம் மற்றும் அறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களை பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. அனுமதி இலவசம்.

X
Dinamani
www.dinamani.com