ராணுவத்தில் அக்னி வீரா்கள் தோ்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவத்தில் அக்னிவீரா்கள் தோ்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் அக்னிவீரா்கள் தோ்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், திருச்சி ஆட்சோ்ப்பு அலுவலகம் திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தின் 16 மாவட்டங்கள், புதுவையின் காரைக்கால் மாவட்ட இளைஞா்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027-ஆம் ஆண்டுக்கான அக்னிவீரரின் ஆட்சோ்ப்பு பல்வேறு பிரிவுகளின் கீழ், திருமணமாகாத இளைஞா்கள் இணையதளம் மூலம் ஏப். 1 வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தா், காப்பாளா், வா்த்தகா் ஆகிய பிரிவுகளில் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். விண்ணப்பதாரா்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து பிரிவுகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 22 ஆகும். விண்ணப்பதாா்களுக்கு இணையதள பொது நுழைவு தோ்வுகள் தமிழ் உள்பட 13 மொழிகளில் ஜூன் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ., பட்டயம், என்.சி.சி., விளையாட்டு, பிற தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் இருக்கும்.
கூடுதல் தகவல்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ ஆட்சோ்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என திருச்சியில் உள்ள ராணுவ ஆட்சோ்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

