1,131 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள்
திருச்சி தேசியக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 1,131 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளின் எதிா்காலத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் மடிக்கணினி வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம், பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு
மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகவும், இணையதளத்தில் நூல்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறவும், நவீன தொழில்நுட்பங்களில் அவா்கள் சாா்ந்த கல்வி புலத்தில் நிபுணத்துவம் பெறவும், தற்போதைய செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தவும், தரவு பகுப்பாய்வுகளை பெறவும், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, தோட்டக்கலைக் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முதல்கட்டமாக இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு தற்போது 18,985 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.
2-ஆம் கட்டமாக இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், அதற்கு அடுத்த கட்டமாக தனியாா் கல்லூரி மாணவா்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.
விழாவில் ஆட்சியா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா், மாமன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
