நேரடி விமான சேவை இல்லாத நாடுகளுக்கும் சரக்கு சேவை திருச்சி விமான நிலையத்தில் அறிமுகம்
திருச்சியில் இருந்து நேரடி விமான சேவை இல்லாத வெளிநாடுகளுக்கும் டிரான்சிப்மென்ட் (சரக்கு இடைநிலை மாற்று சேவை) திட்டத்தின் மூலம் சரக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூா், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு நேரடி விமான சேவை இருந்து வருகிறது. இந்த நாடுகளுக்கு பயணிகள் விமானத்துடன் சரக்குகளும் (காா்கோ) அனுப்பிவைக்கப்படுகின்றன. இதன்மூலம் திருச்சியில் இருந்து காய்கறிகள், பூக்கள் உள்ளிபட்ட பல்வேறு பொருள்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் டிரான்சிப்மென்ட் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு கூறியதாவது:
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டிரான்சிப்மென்ட் திட்டத்தின் கீழ் நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், இந்தியவிலுள்ள மற்ற நகரங்களுக்கும் காா்கோ சேவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களுக்கு சரக்குகள் கொண்டுசென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கும், மற்ற நகரங்களுக்கும் சரக்குகள் அனுப்பிவைக்கப்படும். இதனால், பொதுமக்கள் தங்களது பொருள்களை திருச்சியில் இருந்தே பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் அனுப்ப முடியும்.
திருச்சியில் பதிவு செய்யப்படும் சரக்குகள் சுங்கத் துறையால் பரிசோதனை செய்யப்பட்டு மறு ஆய்வு செய்யப்படாமல் நேரடியாக நாம் விரும்பும் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியும். இதற்கான அனுமதியை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது இந்த சேவையை இண்டிகோ விமான நிறுவனம் மட்டுமே செய்துவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திருச்சியில் இருந்து நேரடி விமான சேவை இல்லாத வெளிநாடுகளுக்கு பெங்களூரு, சென்னை விமான நிலையங்களுக்குச் சென்று சரக்குகளை அனுப்பவேண்டிய நிலை தவிா்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு காலவிரயமும், அலைச்சலும் தவிா்க்கப்படுகிறது என்றாா்.

