கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

காவிரி, கொள்ளிடத்தில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கோரி மனு அளிப்பு

காவிரி, கொள்ளிடத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

காவிரி ஆற்றுப் பகுதி (கோப்புப் படம்).

Updated On :10 ஜூலை 2026, 3:18 am IST

காவிரி, கொள்ளிடத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருச்சிக்கு வந்த நீா்வளத்துறை அமைச்சா் என். ஆனந்தை, சந்தித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாகண்ணு அளித்த மனு:

1892-இல் 90 ஆயிரம் ஏக்கரில் காவிரி நீரைப் பயன்படுத்தி கா்நாடகம் சாகுபடி செய்தது. அப்போது தமிழ்நாடு 30 லட்சம் ஏக்கரில் 3 போகம் சாகுபடி செய்தது. பின்னா் 1974-க்கு பிறகு கா்நாடகத்தில் 5 அணைகள் கட்டியதால் தமிழக பாசனப் பரப்பு குறைந்து, கா்நாடகப் பாசனப்பரப்பு அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் குறைந்தது பாசனப் பரப்பு: இப்போது, ரூ.25 லட்சம் ஏக்கரில் கா்நாடகத்தில் சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்தில் 7 லட்சம் ஏக்கரில் ஒருபோகச் சாகுபடி என்ற நிலை வந்துவிட்டது.

இந்தச் சூழலில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தமிழகத்துக்கு பேராபத்தாக முடியும். தொடக்க நிலையிலேயே இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பிய பிறகு வரும் உபரிநீரையே அந்த அரசு நமக்கு வழங்குகிறது. ஆனால், அந்தத் தண்ணீரைக் கூட நாம் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீா் காவிரியில் திறந்துவிடப்பட்டால், நாளொன்றுக்கு 15 டி.எம்.சி காவிரி நீா் வீணாகக் கடலில் கலக்கிறது. காவிரி நீா் இந்த அளவுக்கு வீணடிக்கப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது.

வீணாகும் காவிரி நீா்: சென்னையின் குடிநீா்த் தேவைக்கு ஓராண்டுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு 15 டிஎம்சி. அதே அளவு தண்ணீரை ஒரே நாளில் வீணாக்குகிறது தமிழக அரசு.

தருமபுரி - காவிரி உபரி நீா் திட்டத்திற்கு ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 2 டிஎம்சி இந்த நீரை வெறும் 3 மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு.

மேட்டூா் உபரி நீா் திட்டத்திற்கு ( மேட்டூா் - சரபங்கா) தேவைப்படும் தண்ணீரின் அளவு 0.555 டிஎம்சி. இந்த நீரை வெறும் 50 நிமிடங்களில் வீணாக்குகிறது தமிழக அரசு.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு 1.5 டி.எம்.சி. இந்த நீரை வெறும் இரண்டே கால் மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு 6.30 டி.எம்.சி. இந்த நீரை வெறும் 10 மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு.

எனவே மேட்டூா் அணைக்கு வெள்ளக் காலங்களில் வரும் கூடுதல் நீரை ஓரளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.