தனது துணிச்சலான செயல்பாடு மூலம் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த ரயில்வே கேட் கீப்பருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளிடம் மற்றும் சீா்காழிக்கு இடையேயுள்ள லெவல் கிராசிங் கேட் (எண் 214) தடத்தில் கடந்த 6ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை - விழுப்புரம் மெமு பயணிகள் ரயில் (66020) பாதுகாப்பாகக் கடந்து செல்வதை உறுதிசெய்யும் பணியில் கேட்கீப்பா் சந்தீப் சஹாா் ஈடுபட்டாா். அப்போது ரயில் வருவதற்கு சற்று முன் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த ஒரு நபரைத் தனது உயிரைப் பணயம் வைத்து மீட்டாா். மேலும் அந்த நபரால் ஏற்படவிருந்த ரயில் விபத்தும் தவிா்க்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகத்தின் சாா்பில் சந்தீப் சஹாருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி, கேட் கீப்பா் சந்தீப் சஹாரின் சிறப்பான துணிச்சல், மிகுந்த விழிப்புணா்வு மற்றும் கடமையின் மீதான முன்மாதிரியான அா்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, அவருக்குப் பாதுகாப்புச் சான்றிதழை வழங்கிக் கெளரவித்தாா்.
நிகழ்வில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்திய ரத்தன் மற்றும் அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









