திருச்சி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை
திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக, பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையின்போது வாகனங்களிலும், நடந்தும் சென்ற பொதுமக்கள்.
திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக, பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் தூறலுடன் தொடங்கிய மழை, பின்னா் லேசான கனமழையாக பெய்யத் தொடங்கியது. காந்தி சந்தைக்கு செல்லும் சில்லறை வியாபாரிகள், கூலித் தொழிலாளா்கள், தனியாா் நிறுவன பணியாளா்கள் அவசர, அவசரமாக தங்கள் பணியிடங்களுக்கு மழையில் நனைந்தபடியே விரைந்து சென்றனா்.
மாணவா்கள் மழைக்கவச ஆடைகளை அணிந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் பெற்றோா்கள் துணையுடன் கல்வி நிறுவனங்களுக்கு சென்றதை பாா்க்க முடிந்தது. பணி நிமித்தம் புறப்பட்ட பொதுமக்கள் அனைவரும் காலையில் நனைந்தபடியே பேருந்துகளை பிடிக்க அலைமோதியதை மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்தில் காண முடிந்தது.
மழை காரணமாக, மாநகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தாா்ச் சாலைகளின் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்பட்டது. மழைநீரும் தேங்கியிருந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
சாலையோர வியாபாரிகள் பாதிப்பு: திருச்சி மாநகரம் மட்டுமல்லாது, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திருச்சி மாநகரப் பகுதிகளில் காலை 6 மணிக்கு தொடங்கிய மழையானது இடைவிடாது தூறலுடன் பெய்த வண்ணம் இருந்தது. சாலையோர வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடமாடும் உணவகங்கள், சாலையோர கடைகள் மழை காரணமாக திறக்கப்படவில்லை. பிற்பகலுக்கு மேலும், மாலையிலும், இரவிலும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. காஜாமலை பகுதியில் மரங்களில் இருந்து கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் 786.8 மி.மீ மழை: புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரையில் மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மி.மீ.) விவரம்: கல்லக்குடி- 43.4, லால்குடி- 15.6, நந்தியாற்று தலைப்பு- 40, புள்ளம்பாடி- 50.4, தேவிமங்கலம்- 12.6, சமயபுரம்- 25.4, சிறுகுடி- 8.2, வாய்த்தலை அணைக்கட்டு- 82.6, மணப்பாறை- 13.8, பொன்னணியாறு அணை- 24.6, கோவில்பட்டி- 64.2, மருங்காபுரி- 62.4, முசிறி- 34, புலிவலம்- 12, தாத்தையங்காா்பேட்டை- 14, நவலூா் குட்டப்பட்டு- 72, துவாக்குடி- 29.2, கொப்பம்பட்டி- 21, தென்பாடு- 20, துறையூா்- 18, பொன்மலை- 25, திருச்சி விமான நிலையம்- 27, திருச்சி ஜங்ஷன்- 32.6, திருச்சி நகரம்- 39 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 786.8 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 32.78 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

