
பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே கழிவுநீா் தேக்கம்: பயணிகள் அவதி
பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே கழிவுநீா் தேங்கியிருப்பது பற்றி....

பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் தொட்டியிலிருந்து நிரம்பி வெளியேறும் கழிவுநீா்.
திருச்சி பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேறி, கோரையாறு வழியாக காவிரியில் கலப்பதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா், புதைசாக்கடைத் திட்டம் மூலம் பஞ்சப்பூா் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, மறு சுழற்சி செய்யப்பட்டு பிற பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
செயல்படாத சுத்திகரிப்பு நிலைய கருவிகள்: இந்நிலையில், பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு கருவிகள் செயல்படாததால் மாநகரில் இருந்து செல்லும் கழிவுநீரானது சுத்திகரிப்பு தொட்டியில் நிரம்பி வழிந்து, அதே பகுதியில் குளம்போல ஆங்காங்கே தேங்கி, கடும் துா்நாற்றம் வீசுகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் பஞ்சப்பூா் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே இந்த அவலம் தொடா்கிறது. பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், சுற்று வட்டாரப் பொதுமக்கள் இந்தப் பகுதியை கடந்து செல்லும்போது முகம் சுழிக்கும் நிலை உள்ளது.
கழிவு கலந்த நீரைக் குடிக்கும் அவல நிலை: மேலும், கழிவுநீா் தேங்கியுள்ள குளத்தில் இருந்து குழாய் மூலம் கோரை ஆற்றில் நேரடியாகத் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சுத்திகரிப்படாத நிலையில் கோரையாற்றில் வெளியேற்றப்படும் இந்தக் கழிவுநீரானது புத்தூா் தொட்டில் பாலம், குடமுருட்டி வழியாக சிந்தாமணியில் உள்ள காவிரியாற்றில் கலக்கிறது. இந்தப் பகுதியில்தான் மாநகரில் வாழும் மக்களுக்கான குடிநீா் எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளும் உள்ளன.
மாநகரப் பகுதியிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரையே மீண்டும் சுத்திகரிக்காத நிலையில், காவிரிக்கு அது திரும்ப வந்து அதன் நிலத்தடி நீா் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கு செல்லும் சூழல் உள்ளது. இதனால் கழிவுநீா் கலந்த தண்ணீரைக் குடிக்கும் அவல நிலையில் மாநகர மக்கள் உள்ளனா்.
தடுக்க நடவடிக்கை தேவை: இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கூறியதாவது: திருச்சிக்கு மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. மேலும், காவிரி நீரை புனிதமாகக் கருதி பல்லாயிரக்கணக்கான மக்கள் நீராடுகின்றனா். இந்தச் சூழலில் பஞ்சப்பூரிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் கழிவுநீா் காவிரியில் கலப்பது பெரிதும் கவலையளிக்கிறது.
லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தூய்மையான நல்ல குடிநீா் கிடைக்கவும், காவிரியின் புனிதத்தைக் காக்கவும் காவிரியில் இதுபோல கழிவு நீா் கலப்பதைத் தடுக்க தமிழக அரசும், மாநகராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
புதிய சுத்திகரிப்பு நிலையப் பணி: இதுதொடா்பாக மாநகராட்சி வட்டாரத்தினா் கூறுகையில், திருச்சி மாநகராட்சி சாா்பில் பஞ்சப்பூரில் ரூ. 226.35 கோடியில் 100 எம்எல்டி திறன் கொண்ட புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இது முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வந்தால், மாநகரக் கழிவுநீா் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படும். மேலும், பழைய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் கழிவுநீரைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





