
கோயில் நிலங்கள் அபகரிப்புக்கு புகாரளித்தால் நடவடிக்கை: அமைச்சா் சீ. ரமேஷ்
தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள் அபகரிப்பு குறித்து புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை பேட்டியளித்த அமைச்சா் சீ. ரமேஷ் உள்ளிட்டோா்.
தமிழகம் முழுவதும் கோயில் நிலங்கள் அபகரிப்பு குறித்து புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் முன் சனிக்கிழமை மேலும் கூறியது: ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமாக 329 ஏக்கா் நிலங்கள் உள்ளதாக கடந்த 1866 ஆம் ஆண்டின் ஆவணங்கள் உள்ளன. 1910, 1930 ஆம் ஆண்டு பதிவேடுகளிலும் இவை கோயில் சொத்துகளாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதி திமுக பகுதிச் செயலா் ராம்குமாா், முறையான மூலப் பத்திரங்கள் ஏதுமின்றி, போலி ஆவணங்களைத் தயாரித்து கோயில் நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றி, அங்கு கட்சி அலுவலகம் நடத்தி வருகிறாா். முறைகேடு செய்யப்பட்டுள்ள அந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 50 கோடி ஆகும்.
துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண பகுதிச் செயலரால் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட முடியாது என்பதால், இதன் பின்னணியில் உள்ளவா்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கிடைக்கப்பட்டுள்ள உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் மூலம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட எவரும் தப்பிக்க முடியாது. கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வா் விஜய் மிகத் தெளிவாக உள்ளாா்.
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும், எனது தொகுதி மக்களின் நலனுக்காகவும் கோயில் சொத்துகளை மீட்டெடுக்க இந்த விவகாரத்தில் இறுதிவரை போராடுவேன்.
தமிழகம் முழுவதும் கடந்த கால ஆட்சியில் திமுகவினா் எங்கு நிலங்களை அல்லது கோயில் சொத்துகளை அபகரித்துள்ளனா் என்பது குறித்த ஆதாரங்களை ஆன்மிக அன்பா்கள், பொதுமக்கள் வழங்கினால், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







