மின் இணைப்பு இல்லாத 50 வீடுகளுக்கு இலவச சூரிய விளக்கு

 திருப்பத்தூர், ஆக.21 திருப்பத்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் மின் இணைப்பு இல்லாத 50 வீடுகளுக்கு இலவசமாக சூரிய விளக்குகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.  தி
Updated on
1 min read

 திருப்பத்தூர், ஆக.21 திருப்பத்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் மின் இணைப்பு இல்லாத 50 வீடுகளுக்கு இலவசமாக சூரிய விளக்குகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.

 திருப்பத்தூர் கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

 இதில் ஜோலார்பேட்டையில் இயங்கி வரும் 'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் முன்னேற்றக் சங்கம்' தொண்டு நிறுவனம் சார்பில், மின்இணைப்பு இன்றி இருளில் வசித்துவரும் குடும்பங்களுக்கு 50 சூரிய விளக்குகள் வழங்கப்பட்டன.

 ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாளாக நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொண்டு நிறுவனம் 50 வீடுகளுக்கு சூரிய சக்தியால் எரியும் விளக்கை அளித்துள்ளது.

 இதுகுறித்து அத்தொண்டு நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராமமூர்த்தி கூறியது:

 மலையடிவாரம், நீர்நிலை புறம்போக்கு ஆகிய பகுதிகளில் குடிசைகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு என்பது இயலாத ஒன்று.

 இவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்துவதால் இவர்களுக்கு செலவு அதிகமாகிறது. மாலை நேரத்தில், குடிசை வீட்டில், குறைவான விளக்கு ஒளியில் சமைப்பதால் பாத்திரத்தில் விஷப்பூச்சிகள் விழ வாய்ப்புள்ளது.

 அதனால் பணம் படைத்தவர்களிடம் நிதி பெற்று, ரூ.1,250-க்கு விற்கக்கூடிய சூரிய விளக்கை ரூ.1000 விலையில் வாங்கி மின் இணைப்பு இல்லாத வீடுகளை கண்டறிந்து வழங்கியுள்ளோம்.

 இந்த சூரிய விளக்குக்கான பேனலை சூரிய ஒளி படும்படியாக வைத்தால் போதும், இரவில் 4 மணி நேரம் வரை எரியும் திறன் உடையது என்றார். இதை தயாரித்து விற்பனை செய்யும் சென்னை 'ஜெகத் ஜோதி லைட்ஸ்' நிறுவன விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் எம்.ஜி.பாஸ்கர் கூறியது:

 இந்த சூரிய விளக்குகளில் தற்போது ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பேனல்கள், எல்ஈடி பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள சிஎப்எல் பல்புகளைவிட 4 மடங்கு குறைவான மின்சாரத்தை இவை எடுத்துக்கொள்ளும்.

 இதை மக்கள் பயன்படுத்தும்போது மண்ணெண்ணெயின் தேவை குறையும், இந்திய அரசுக்கு இதற்காக மானியமாக செலவிடும் பணமும் மிச்சமாகும்.

 மின்வசதி இல்லாத இடங்களில் தள்ளு வண்டி உணவகங்கள், சலவைத் தொழிலாளிகள், காய்கறி கடைகள், தாற்காலிக திருவிழாக் கடைகளில் இத்தகைய விளக்குகளை பயன்படுத்தலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com