விவசாயக் கடன் தள்ளுபடியால் நலிவடைந்த நிலவள வங்கிகள்

 தருமபுரி, ஜூலை 3: தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடியை அடுத்து நிலவள வங்கிகள் செயலிழந்து காணப்படுகின்றன. இதனால் 330-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.  விவ
Updated on
1 min read

 தருமபுரி, ஜூலை 3: தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடியை அடுத்து நிலவள வங்கிகள் செயலிழந்து காணப்படுகின்றன. இதனால் 330-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

 விவசாயிகளுக்காகவே கடன் வழங்கி விவசாய உற்பத்தியில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்தில் கூட்டுறவு நிலவள வங்கிகள் தொடங்கப்பட்டன.

 தமிழக அரசு அடுத்தடுத்து அறிவித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வட்டி தள்ளுபடியால் படிப்படியாக நிலவள வங்கிகள் தங்களின் வைப்புநிதியில் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இதனால் நபார்டு வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையை நிலவள வங்கிகளால் செலுத்த முடியவில்லை.

 இதனால் நபார்டு வங்கி இவ்வங்கிகளுக்கு கடன் தருவதை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு அதிமுக அரசிடம் கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கிகள் கடன் தருவதற்கு உத்தரவாதம் தருமாறு வேண்டுகோள் விடுத்தது.

 இதுகுறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு எவ்வித கடன்களும் வழங்க முடியவில்லை. இதனால் நிலவள வங்கிகள் விவசாயிகளுக்கு கொடுத்திருந்த கடன்களை வசூலிக்க முடியவில்லை.

 2006-ல் திமுக அரசு ரூ.6700 கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தது. இதில் நிலவள வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்திருந்த ரூ.1300 கோடியும் அடக்கம்.

 இந்நிலையில் அரசு தள்ளுபடி செய்த பணத்தை 8 சதவீத வட்டியுடன் 3 ஆண்டுகளில் 60 சதவீதத் தொகையை மட்டுமே திருப்பி கொடுத்துள்ளது. இதனால் பிரதம நிலவள வங்கிக்கு தரவேண்டிய தொகையை தமிழக அரசு முழு தொகை அளிக்கும்போது திருப்பித் தருவதாக நிலவள வங்கிகள் தெரிவித்துள்ளன.

 இதனால் மாநிலத்தில் உள்ள 180 வங்கிகளில் பணிபுரியும் 330-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 முதல் 10 மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை.

 அரசு இவ்வங்கிகளுக்கு இன்னும் ரூ.500 கோடி கடன் திருப்பித் தர வேண்டியுள்ளது.

 இதுகுறித்து நிலவள வங்கி பொதுச் செயலர் ஜீனசந்திரன் கூறியது:

 தருமபுரி மண்டலத்தில் உள்ள 5 வங்கிகளில் பணியாற்றும் 38 ஊழியர்கள் மாத ஊதியத்தை விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகை மூலம் பெற்றுக்கொள்கிறோம்.

 சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விவசாயிகளிடமிருந்து வரவேண்டிய கடன் வருவதில்லை. இதனால் வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியவில்லை.

 மாநில அரசு தற்போது தள்ளுபடி செய்த கடனுக்கு தரவேண்டிய வட்டித் தொகை நிறுத்தியுள்ளதால் ஊதியம் கிடைக்க வழியின்றி பணியாளர்கள் அவதியுறுகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com