போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நுண் கடன் வலையில் சிக்கும் மகளிர் குழுக்கள்!

வேலூர், நவ. 5:   வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களில் பலர் "நுண் கடன்' வலையில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.   இம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, அரசு பல்வேற

Updated On :20 செப்டம்பர் 2012, 2:59 pm

வேலூர், நவ. 5:   வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களில் பலர் "நுண் கடன்' வலையில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.

  இம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, அரசு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. சில குழுக்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் சுய தொழில் செய்து வருவாய் ஈட்டி கடனை அடைக்கின்றனர்.

  சில குறிப்பிட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் அத் தொகையை செலவு செய்வதுண்டு. ஆனால், கடன் தொகையை நிலுவையின்றி செலுத்தி முடிக்கின்றனர்.

  இந் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூர் மாவட்டத்துக்குள் 5-க்கும் மேற்பட்ட நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. இந் நிறுவனங்கள் குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களைத் தங்களது வலையில் சிக்க வைத்துள்ளன.

  எதையும் ஈடாகப் பெறாமல், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உடனடியாகக் கடன் கொடுக்கின்றன. அதற்குத் தேவையான ஒரே தகுதி, மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால் போதும். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை நகல்கள், தம்பதி புகைப்படம் ஆகியவற்றை அளித்தால் கடன் கிடைக்கும்.

  கடன் அளிக்கும்போது கடவுளின் மீது சத்தியம் செய்யக்கூறி, பணத்தை வழங்குகின்றனர். வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் சென்று தவணையை வசூலிக்கின்றனர்.

  இந் நிறுவனங்களில் 15 பேர் அடங்கிய குழு கடன் பெற்றால், அனைவரும் அன்று ஆஜராக வேண்டும். குழுவில் ஒருவர் அந்த வார தவணையைச் செலுத்தாவிட்டால், அதை மற்றவர்கள் பங்கிட்டுச் செலுத்த வேண்டும். தொடர்ந்து 5 வாரம் செலுத்தாவிட்டால் வீட்டை பூட்டுவோம் என்பது உள்பட சில இந் நிறுவனங்களின் விதிகளில் உள்ளதாம்.

  கடன் தொகை அளிக்கும்போது, ஆவணங்கள் செலவு என ரூ.400 வரை பிடித்தம் செய்கின்றனர். வாரம் ஒரு முறை அசல், வட்டியோடு, வட்டிக்கு நிகரான தொகையை சேமிப்பு எனக் கூறி பெறுகின்றனர். 50 வாரக் கடன் எனக்கூறி, 45 வாரத்திலேயே, சேமிப்பு தொகையைக் கைப்பற்றிக் கொண்டு அசலில் இருந்து கழிக்கின்றனர். இதுபோன்று பல்வேறு "தந்திரங்'களை இந் நிறுவனங்கள் கையாள்கின்றன. ஆனால், மகளிரிடம் இருந்து பெறும் சேமிப்புக்கு இந் நிறுவனங்கள் வட்டி தருவதில்லை.

  மேலும், ஓராண்டுக்கு எனக்கூறி 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் இந் நிறுவனங்கள், முன்கூட்டியே சேமிப்பைக் கையகப்படுத்தி கடன் தொகையை 10 மாதங்களில் நிறைவு செய்து விடுகிறது. இதன் மூலம், இந் நிறுவனங்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது.

  மொத்தத்தில், 10 மாதங்களுக்கு இந் நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டியைக் கணக்கிட்டால் 26 முதல் 28 சதவீதம் வரை வரும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர். இவ்வாறு கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

  ஆந்திரத்தில் 12.5 சதவீதம் வட்டியில் மகளிர் குழுக்களுக்கு அரசு நுண் கடன் வழங்குகிறது. அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும் மகளிருக்கு வட்டியில் 8 சதவீதம் மானியம் அளிக்கிறது.

  அதனால், அங்கு பல்வேறு நுண்கடன் நிறுவனங்களுக்கு வேலையில்லாமல் போனது. ஆகையால், மாநில எல்லையான வேலூர் மாவட்டத்தைக் குறிவைத்து, இந் நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.

  மேலும், இரு மடங்கு வட்டி வசூலித்து, மகளிர் குழுவினரைத் தொடர்ந்து தங்களது பிடியில் வைத்திருக்கின்றன.

  வாரம் ஒரு முறை தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், உழைக்கும் பணம் முழுவதையும் இந் நிறுவனங்களின் கைகளில் கொடுத்து கடனை அடைத்துவிட்டு, மீண்டும் கடன் பெற்றாக வேண்டிய நிலையில் இக் குழுவினர் உள்ளனர்.

  இது போன்று நுண் கடன் நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவித்து வரும் சுய உதவிக் குழுவினருக்கு தமிழக அரசு "கை' கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.