அவல நிலையில் அரசு மகளிர் பள்ளி!

அரூர், ஆக. 16: கட்டட வசதியில்லாததால், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றனர். மலைக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயிலும் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ச
Updated on
1 min read

அரூர், ஆக. 16: கட்டட வசதியில்லாததால், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றனர். மலைக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயிலும் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படவில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

 இப்பள்ளியில் 1,620 மாணவிகள் படிக்கின்றனர். 47ஆசிரியர்களும் உள்ளனர். இப்பள்ளி மாணவிகள் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர்.

 24.7.1965-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி, 31.7.1981-ல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கான இடவசதி சுமார் 2.30 ஏக்கர் பரப்பளவாகும்.

இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டடம்  கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஓடுகள் போர்த்தப்பட்ட மேற்கூரைகள், மண்ணால் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் மாணவிகள் பள்ளி வேலைநேரங்களில் படிக்கவும், தேர்வு எழுதவும் மரத்தடியை நம்பியுள்ளனர்.

 மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், நூலகத் துறை உள்ளிட்டவற்றின் சார்பில் சில புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இருந்தாலும், மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்பறை கட்டட வசதி இல்லை.

 இதுதொடர்பாக அரசுக்கு பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லையாம். பள்ளியை ஆய்வு செய்யும் அதிகாரிகள் கட்டடங்கள் கட்டுவதற்கு போதுமான இடவசதி இல்லை என தெரிவிக்கின்றனராம்.

 இட பற்றாக்குறைக்கு

தீர்வு கிடைக்குமா?

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 25 ஏக்கர் நிலப் பரப்பில் உள்ளது. இதன் வளாகத்தில் 3 அரசு விடுதிகள், விளையாட்டு மைதானம், கோட்டாட்சியர் அலுவலகம் கட்டடப்பட்டிருந்தபோதிலும், இன்னமும் இடவசதி உள்ளது. எனவே, அங்குள்ள இடத்தில் மகளிர் பள்ளிக்கு தேவையான அடுக்குமாடி வகுப்பறை கட்டடங்கள் கட்டலாம் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும்,

பணியாளர்களும் பற்றாக்குறை!

 பள்ளியில் நூலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் இல்லை. அலுவலகத்தில் ஒரே இளநிலை உதவியாளர் உள்ளார். எனவே, இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலியாகவுள்ள தமிழ், ஆங்கில பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்களையும் நிரப்ப வேண்டும் என்றும் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 அடிப்படை வசதிகளும் தேவை

  பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லை. இதனால், பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கால்வாய் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

 போக்குவரத்து நெரிசல் மிகுந்த அரூர்-சேலம் செல்லும் நெடுஞ்சாலையைக் கடக்க மாணவிகள் அச்சப்படுகின்றனர். இதனால், பள்ளி முன் வேகத் தடை அமைக்க வேண்டும் என்றும் மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

 மலைவாழ் மாணவிகள் அதிக அளவில் பயிலும் இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை உடனே செய்துத் தர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com