தருமபுரி, ஆக. 24: தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வருவதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும் விளைநிலங்களை வீட்டுமனைகளுக்காக விவசாயிகள் விற்கும் போக்கு அதிகரித்துள்ளது.
மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்நிலையில், 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 1.80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய சாகுபடி நடைபெற்றது. 2009-ம் ஆண்டு வேளாண் செய்யப்படும் பரப்பளவு 1 லட்சம் ஹெக்டேருக்கும் குறைவாக உள்ளது.
3 ஆண்டுகளாக தொடர்ந்து பருவமழை பொய்த்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் 30 அடிக்கு கீழே சென்றுள்ளது. இதனால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைத் தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை வீட்டுமனைகளை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் தொழில் புரிவோரிடம் குறைந்த விலைக்கு விற்கும் சூழல் நிலவுகிறது.
போதிய மழை இல்லாமல் போவது, வேலைத் தேடி அண்டை மாநிலத்திற்கு செல்வது போன்ற காரணங்களால் 26 சதவீதம் விவசாய நிலங்கள் தரிசாக உள்ளன. ஆண்டுதோறும் நல்லம்பள்ளி, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் சராசரியாக 12 ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைக்காக விற்பனை செய்யப்படுகின்றன.
வீட்டுமனைகள் விற்பனை செய்வோர், விவசாயிகளிடம் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.30 லட்சத்திற்கு வாங்கி, வீட்டுமனைகளாக ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்கின்றனர்.
மாவட்டத்தில் அதிக அளவு விவசாயம் நடைபெறும் பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரம் சாலை, மொரப்பூர் சாலை மற்றும் தருமபுரி ஒன்றியத்தில் நடப்பாண்டில் மட்டும் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட நிலஅளவையர் கோவிந்தன் தெரிவித்தார்.
விவசாய நிலங்கள் தொடர்ந்து வீட்டுமனைகளாக மாற்றப்படுவதால், மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி குறைந்து, விவசாயம் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம் என்ன
தருமபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், அதிகரித்துவிட்ட விலைவாசி மற்றும் வேளாண் தொழிலில் போதிய வருவாய் இன்மை ஆகியவற்றால் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு வேலைத் தேடி செல்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் எம். ஆறுமுகம் கூறியது:
மாவட்டத்தில் அதிக அளவு விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் முகவர்களின் கையில் உள்ளது. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, வீட்டுமனை போட்டு அதிக லாபம் ஈட்டுகின்றனர்.
கேரளத்தில் இருப்பதுபோல், விவசாய நிலங்களை வீட்டுமனைகளுக்கு விற்கத் தடை செய்யும் சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பயிர் மற்றும் வேளாண் கருவி கடனுதவிகளை உடனுக்குடன் வழங்கி அவர்கள் விவசாயத்தை தொடர ஊக்கமளித்தால் நிலைமை மாறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.