விழுப்புரம்-வேலூர் இடையே திருவண்ணாமலை வழியாக ரயில்:​ அடுத்த மாதம் இயக்கப்படும்

திருவண்ணாமலை, பிப். 4: விழுப்புரம்-வேலூர் இடையே திருவண்ணாமலை வழியாக வரும் மார்ச் மாதம் பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறினார். விழுப்புரம்-காட்பாடி இடையே மீட்ட
Updated on
1 min read

திருவண்ணாமலை, பிப். 4: விழுப்புரம்-வேலூர் இடையே திருவண்ணாமலை வழியாக வரும் மார்ச் மாதம் பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறினார்.

விழுப்புரம்-காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 2005-ம் ஆண்டு தொடங்கியது. முதலில் காட்பாடி-வேலூர் இடையே 10 கி.மீ. தூரம் அகல பாதையாக மாற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில் வேலூர்-விழுப்புரம் இடையே 150 கி.மீ. தூர மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணி கடந்த டிசம்பர் மாதம்தான் நிறைவடைந்தது.

இந்த ரயில் பாதையில் கண்ணமங்கலம், போளூர், அகரம்சிப்பந்தி, நாயுடுமங்கலம், துரிஞ்சாபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் திருவண்ணாமலை இடையே உள்ளன. ரயில் நிலையங்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய அகல ரயில் பாதையில் கடந்த ஜன.20-ம் தேதி ரயில் என்ஜின் இயக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன், முதன்மை நிர்வாக அலுவலர் ராமநாதன், திருச்சி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை 6 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் வேலூரில் இருந்து விழுப்புரம் வரை ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில் தீபக் கிரிஷன் நிருபர்களிடம் கூறியது: விழுப்புரம்-வேலூர் இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளன. புதிய பாதை பணிகள் திருப்திகரமாக உள்ளன. இப்பாதையில் இம்மாத இறுதிக்குள் சரக்கு ரயில்கள் இயக்கப்படும்.

பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மூன்று நாள்கள் தொடர் சோதனை மேற்கொள்வார். அவர் அனுமதி கிடைக்கவுடன் மார்ச் மாதம் பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லும் அனைத்து சரக்கு ரயில்களும் அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை வழியாக திருப்பி விடப்படும்.

திண்டிவனம்-திருவண்ணாமலை பாதை திண்டிவனம்-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதை பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வேக்குச் சொந்தமான நிலங்களில் மட்டும்தான் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் கிரிஷன்.

திருவண்ணாமலை ரயில் நிலைய அதிகாரிகள் வெங்கடேசன், வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com