தருமபுரி, ஜூன் 27: தருமபுரி மாவட்டத்தில் உள்ள பட்டுக்கூடு விற்பனை அங்காடிகளில் பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 16 இடங்களில் பட்டுக் கூடு விற்பனை அங்காடிகள் உள்ளன. இதில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த அங்காடிகளில் விவசாயிகள் கொண்டுவரும் பட்டுக்கூடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டு நூற்பாலை முகவர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
பருவமழை குறைந்துள்ளதாகவும், நிலத்தடி நீர் மட்டம் போதிய அளவு இல்லாததாலும் மல்பெரி சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், உணவுப் பொருள்களைப் பயிரிட்டுவந்த விவசாயிகள், தற்போது பட்டுக்கூடு தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 91 பட்டு நூற்பாலைகள், 28 நூல் முறுக்கேற்றும் ஆலைகள் ஆகியவற்றுக்குத் தேவையான பட்டுக் கூடுகள் இவ்விரு அங்காடிகளில் இருந்து பெறப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தரமான வெண்பட்டுகளை கொள்முதல் செய்ய இவ்விரு அங்காடிகளுக்கு சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பட்டுநூல் முகவர்களும் அதிக அளவில் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு சேலம், கோவை, கோபி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பட்டுக்கூடு கொள்முதல் அங்காடிகளைவிட தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பட்டுக்கூடு அங்காடிகளில் கூடுதல் விலைக்கு பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆசியாவிலேயே பெரிய பட்டுக்கூடு விற்பனை சந்தை எனப்படும் கர்நாடகத்தில் உள்ள ராம்நகர் சந்தையில் நாள்தோறும் 40 ஆயிரம் பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பாலக்கோடு, பென்னாகரம் அங்காடிகளுக்கு நாள்தோறும் ஏராளமான முகவர்களும், விவசாயிகளும் வருகின்றனர். இதனால், மாதந்தோறும் தொழில் நடைபெறும் அங்காடிகளாக இவை உள்ளன.
கடந்த 6 மாதங்களில் மார்க்கெட் நிலவரம்:
கடந்த 6 மாதங்களில் கர்நாடக மாநிலம் ராம்நகரில் நடைபெற்ற பட்டுக்கூடு சந்தையில் வெள்ளை பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.260-க்கும், குறைந்தபட்சமாக ரூ.195க்கும், மஞ்சள் பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக ரூ.235-க்கும், குறைந்தபட்சமாக ரூ.110-க்கும் விலை போனது.
இதேபோல் தருமபுரி பட்டுக்கூடு சந்தையில், வெள்ளை பட்டுக்கூடு அதிகபட்சமாக 1 கிலோ ரூ.248-க்கும் குறைந்தபட்சமாக ரூ.246-க்கும், மஞ்சள் பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.205க்கும் குறைந்தபட்சமாக ரூ.155-க்கும் விலை போனது.
கோவை பட்டுக்கூடு சந்தையில் வெள்ளை பட்டுக்கூடு அதிகபட்சமாக 1 கிலோ ரூ.245-க்கும் குறைந்தபட்சமாக ரூ.215-க்கும், மஞ்சள் பட்டுக்கூடு 1 கிலோ அதிகபட்சமாக ரூ.191-க்கும், குறைந்தபட்சமாக ரூ.142-க்கும் விலை போனது.
விவசாயிகள் வருகை அதிகரிப்பு:
இதுகுறித்து பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கே.ஜெயவேல் கூறியது:
அங்காடிகளுக்கு எடுத்து வரப்படும் பட்டுக் கூட்டின் தரத்தைப் பொருத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்யும் நாளன்றே விவசாயிகளுக்கு பணம் அளிக்கப்படுகிறது. இதனால் தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு நாள்தோறும் விவசாயிகள் அதிக அளவில் வருகின்றனர் என்றார்.
விற்பனை விலை அறிய எஸ்.எம்.எஸ்.:
மாநிலத்திலுள்ள முக்கிய பட்டுக்கூடு விற்பனை அங்காடிகளில் ஒவ்வொரு நாளின் விற்பனை விலையை உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க பட்டு வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.