போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வேட்பாளர் முதல் பிரசாரம் வரை இன உணர்வு இழையோடும் இடைத்தேர்தல்

தருமபுரி, மார்ச் 2: பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளர் முதல் பிரசாரம் வரை இன உணர்வு இழையோடுகிறது.  பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் வன்னியர்கள் 68 சதவீதம

Updated On :20 செப்டம்பர் 2012, 1:14 pm

தருமபுரி, மார்ச் 2: பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளர் முதல் பிரசாரம் வரை இன உணர்வு இழையோடுகிறது.

 பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் வன்னியர்கள் 68 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 18 சதவீதம், மலைவாழ் மக்கள் 14 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். வன்னியர்களே இங்கு பெரும்பான்மையாக இருப்பதால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக திமுக,அதிமுக, பாமக,தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

திமுக மும்முரம்:

 கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது முதலே, பென்னாகரம் தொகுதியில் திமுக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. மாநில உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திமுகவினர் தொடர்ந்து பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.

 பென்னாகரம் தொகுதியில் அனைத்து சாலைகளும் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. மேலும், சின்னாறு அணையிலிருந்து பென்னாகரம் நகருக்குக் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை முடுக்கிவிட்ட திமுக, தேர்தலுக்கு முன்பு குடிநீர் கொடுத்துவிடத் தீவிரமாக உள்ளது.

 இதுதவிர, பாமகவினரை தங்களது பக்கம் ஈர்க்கும் திட்டத்தையும் வெற்றிகரமாகச் செய்து வருகிறது திமுக. மேலும், அனைத்து தரப்பு மக்களையும் எளிதாகச் சென்றடையும வகையில், ஒவ்வொரு பகுதிக்கும் கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்தேறி வருகின்றன.

 பாமக மீது குற்றச்சாட்டு: கடந்த 1996 முதல் 2006-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, பென்னாகரம் தொகுதி பக்கமே வரவில்லை என்ற குற்றச்சாட்டையும் திமுகவினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக கோட்டையாகக் கூறப்படும் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில், பாமக வேட்பாளர் செந்திலுக்குக் கிடைத்த வாக்குகள் குறைவே. இதையும் மக்களின் முன்வைக்க திமுக தவறுவதில்லை.

 ஆனால், அமைச்சர் எ.வ.வேலு தனது ஆதரவாளர்களுக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவத்தை, திமுகவைச் சேர்ந்த பிறருக்கும் அளிக்க வேண்டும் என மற்றொரு பிரிவினர் கூறி வருகின்றனர். இது தேர்தல் பணியில் சற்று தொய்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

பாமகவின் பிரசாரம்:

 தேர்தல் ஒத்திவைப்புக் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தும் வகையில், கடந்த ஜனவரி முதலே பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சமுதாய மக்களின் இன உணர்வைத் தட்டி எழுப்பும் வகையிலேயே தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.

 அரசுப் பணியில் வன்னியர்களின் பங்களிப்பு குறைந்து வருவதையும், அச் சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே கட்சித் தலைமை பாமக என்பதையும் மக்களிடம் தொடர்ந்து கூறி வருகிறார். இதில், பாமகவின் இன உணர்வுப் பேச்சால் கவரப்பட்டு வருவோரே அதிகம். அதே பேச்சுக்காக பாமகவை விட்டு மாற்றுக் கட்சிக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைவாகே உள்ளது. ஆனால், அத் தொகுதிக்கு பாமக என்ன செய்தது என்ற கேள்வி பாமகவுக்கு பலவீனமானதாக அமைந்துள்ளது.

அதிமுகவுக்கு கம்யூனிஸ்ட்

ஆதரவளித்தால்..

  மலைக் கிராம மக்களின் வாக்குகள் இந்திய கம்யூ.க்கு ஆதரவாக உள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என ஓரளவு வாக்குவங்கி உண்டு. இரு கட்சிகளையும் அரவணைத்து தேர்தல் பணியாற்றினால், அதிமுகவால் கூடுதல் வாக்குகள் பெற முடியும்.

தேமுதிகவின் வியூகம்:

 இதுதவிர, கிராம மக்களைக் குறிவைத்து தேமுதிக தேர்தல் பிரசாரம் அமையும் என்றே தெரிகிறது. அதிலும் குறிப்பாக, திமுக, பாமக தரப்பில் இதுவரை செல்லாத கிராமங்களை முற்றுகையிட தேமுதிகவினர் முடிவு செய்துள்ளனர்.

 பென்னாகரம் தொகுதியில் விஜயகாந்த் ரசிகர் மன்றங்கள் அதிகம் என்றும், இதன் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் முயற்சியையும் தேமுதிக மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. இதனால், போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.