உடலுக்கு தான் ஊனம்; மனதுக்கு அல்ல சப்தமின்றி சாதிக்கும் மாற்றுத்திறனாளி!

ராசிபுரம்,நவ.16: இரு கால்களும் ஊனமுற்ற நிலையிலும், உடலுக்குத்தான் ஊனம் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் சப்தமின்றி சாதனை புரிந்து வருகிறார் மூன்று வயதிலேயே இரு கால்கள் பாதிக்கப்பட்ட இளைஞர் சந்துரு
Updated on
1 min read

ராசிபுரம்,நவ.16: இரு கால்களும் ஊனமுற்ற நிலையிலும், உடலுக்குத்தான் ஊனம் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் சப்தமின்றி சாதனை புரிந்து வருகிறார் மூன்று வயதிலேயே இரு கால்கள் பாதிக்கப்பட்ட இளைஞர் சந்துரு (26).

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அத்திபலகானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலித் தொழிலாளர்களான ராஜீ-செல்வி தம்பதியின் மகன் சந்துரு .

  இவருக்கு மூன்றாவது வயதில், வலது கால் மூட்டில் ஏற்பட்ட கட்டியால் நரம்புகள் பாதித்து, இடது காலிலும் அதன் பாதிப்பு தொற்றிக்கொண்டது. இது வாழ்நாள் ஊனத்தை ஏற்படுத்திவிட்டது.

 ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்த  இவர், விவசாயக் கூலிக்குச் செல்லும் பெற்றோர், இரு தங்கைகள் என்ற  குடும்பச்  சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு படிப்பை தொடராமல் மாதம் ரூ.800 சம்பளத்துக்கு சேர்ந்தார்.

 கடந்த 10 ஆண்டுகளாக  திருமணம் மற்றும் கோயில் விழாக்களுக்கு ஒலிபெருக்கி, மின் விளக்குகள் வாடகைக்கு விடும் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு சம்பளம் தற்போது ரூ.3,000.

 பார்த்தால் தலைசுற்றும் 120 அடி உயர கோயில் கோபுரம், உயர்ந்த திருமண மண்டபம் போன்றவற்றின் உயரம் இவருக்கு சர்வசாதாரணம். 100 அடி உயர பனை மரம், தென்னை மரம் போன்றவற்றை சர்வ சாதாரணமாக ஏறி இறங்கும் இவரது சராசரி வாழ்க்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

 தனது சொந்த வேலைகளைத் தானே செய்து, கிராமத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ராசிபுரம் நகருக்கு வந்து மின்சாரத்துடன் மின்சாதனங்களுடன் பணியாற்றுவது இவரது அன்றாட வாழ்க்கை.

  உடலில் குறைபாடு உள்ளவர்களுக்கு பேருந்துக் கட்டண சலுகை, இலவச சைக்கிள், பல்வேறு மானியக் கடன்கள், தொழில் பயிற்சிகள் போன்றவை வழங்கப்பட்டு வரும் நிலையில், ""அரசின் இலவசத் திட்டங்களை எதிர்பார்க்காமல் என்னால் உழைத்துப் பிழைக்க முடியும்'' என்கிறார் இந்தத் தன்னம்பிக்கை இளைஞர்.

 உச்சிக்கு ஏறுவதும் இறங்குவதும்தான் இவரது வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில், அரசின் சலுகைகள் பெற்றால் அது எனது எண்ணத்தை மாற்றிவிடும். எனது உழைப்பை மதித்து தொழில் துவங்க கடன் கொடுத்தால், மேலும் சாதித்துக் காட்ட முடியும்.

 திருமணம் செய்து கொண்டு சராசரி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், என்னை நம்பி வரும் பெண்ணின் மனதில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. தனியாக தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு தரவேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியம் என்கிறார் சந்துரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com