சாலை வசதிக்காக ஏங்கும் மலைக் கிராம மக்கள்!

அரூர், அக். 11: அரூர் அருகே இருக்கும் மலை கிராம மக்கள் சாலை மற்றும் போக்குவரத்து இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லைப் பிரச்னை காரணமாக தங்களுக்கு அடிப்படை வசதி
Updated on
2 min read

அரூர், அக். 11: அரூர் அருகே இருக்கும் மலை கிராம மக்கள் சாலை மற்றும் போக்குவரத்து இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லைப் பிரச்னை காரணமாக தங்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் கிராம மக்கள்.

 தருமபுரி மாவட்டம் வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்டது ஆலம்பாடி, கருங்கல்பாடி, ஏழுமதுரை, புதூர், மூன்றாம்பட்டி, கோபாலபுரம் மலைக் கிராமங்கள். இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

 இங்குள்ள கிராமங்கள் தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் கடைசி எல்லைப்பகுதியில் உள்ளன. கிராமங்களை பிரிக்கும் வகையில் தென்பெண்ணையாறும், அடர்ந்த வனப்பகுதியும் உள்ளன. இதனால் இங்குள்ள மக்கள்  தீவுகளில் வசிப்பதை போல் உள்ளனர்.

பஸ் வசதி இல்லை

 ஆலம்பாடி, கருங்கல்பாடி கிராம மக்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இம் மாவட்டத்தில் இருந்து பஸ் வசதி இல்லை. மாறாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு, தனியார் பஸ்களையே நம்பியுள்ளனர். போக்குவரத்து குறைவான பகுதி என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

   ஆலம்பாடி, கருங்கல்பாடியில் இருந்து தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதி  வரையிலும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதியில் மட்டும் 2 கி.மீ தூரம் குண்டும், குழியுமான மண் சாலையாகவே உள்ளது.

  எனவே போக்குவரத்து வசதிக்கும், கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்வதற்கும் ஏதுவாக, கோபாலபுரம்-கொட்டாவூர்  வனப்பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என கடந்த 19.8.2009-ல் கிராம மக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தார் சாலை அமைக்க வேண்டிய இடம் திருவண்ணாமலை மாவட்டம் என்றாலும், அதனை பயன்படுத்தும் மக்கள் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். எனவே எங்கள் மாவட்டத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை என அன்றைய திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் இராம.ராஜேந்திரன் கிராம மக்களின் கோரிக்கை மனுவுக்கு பதில் அளித்துள்ளார்.

  இரு மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் கிராம மக்கள் வசிப்பதால் தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணைந்து சாலை, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓட்டுப்போட 4 கி.மீ தூரம்

நடக்க வேண்டும்

 ஆலம்பாடி, கருங்கல்பாடி பகுதியில் 5 ஆயிரம் மக்கள்தொகை இருப்பதால் தேர்தலில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க வேண்டும். தற்போது அங்குள்ள ஆலம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.

 ஆனால் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலில் 4 கி.மீ தூரமுள்ள கீழ்செங்கப்பாடிக்கு சென்று வாக்குகளை பதிவு செய்கிறோம். எனவே ஆலம்பாடியிலேயே நிரந்தரமாக வாக்குப்பதிவு மையம் அமைக்க வேண்டும் என்கின்றனர் கிராம

மக்கள்.

  இது குறித்து அரூர் எம்எல்ஏ பி.டில்லிபாபு கூறியது:

 ஆலம்பாடி, கருங்கல்பாடி கிராம மக்கள் சாலை, போக்குவரத்து வசதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் டி.அம்மாபேட்டை உயர்மட்ட பாலம் பணிகள் நிறைவடைந்துவிடும்.

அதைத்தொடர்ந்து டி.அம்மாபேட்டை, நீப்பத்துறை வழியாக ஆலம்பாடி, கருங்கல்பாடிக்கு பஸ்கள் சென்று வரும் வகையில் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com