குடியாத்தம், ஜூலை 14: தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பாதுகாப்புக் கட்டமைப்புகளை முறைப்படுத்தி, மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 250 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:
500-க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கிவந்த இப்பகுதியில், அரசின் கடுமையான சட்டங்களாலும், ஆள் பற்றாக்குறையாலும் பாதி தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.
கடந்த காலங்களில், பல தீ விபத்துகள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தீ விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இருந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளில் நடந்த தீ விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் இழந்துள்ளனர்.
விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை?
இந்த விபத்துகளுக்கு அரசு கொண்டு வந்த விதிமுறைகளை தொழிற்சாலை உரிமையாளர்கள் பின்பற்றாததே காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் முன், பின் பக்கம் வாயில்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவசர கால வழி ஒன்று தனியாக இருக்க வேண்டும். மூலப் பொருள்களை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். தீயணைப்பு வாகனம் சுற்றி வரும் வகையில் தொழிற்சாலையைச் சுற்றி காலி இடம் கட்டாயம் இருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் சமயங்களில் வேலையாள்கள் சமயோசிதமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வும் அளித்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பின்பற்றாததால்தான் தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் நடந்துள்ளன.
குடியாத்தம் பகுதியில் பெரும்பாலான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் குடியிருப்புப் பகுதிகளில்தான் உள்ளன.
அதிகாரிகள் மீது நடவடிக்கை ?
குடியாத்தம் செதுக்கரையில் செவ்வாய்க்கிழமை விபத்து நடந்த பின் சம்பவ இடத்தை வடமேற்கு மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் டேவிட் வின்சென்ட், காவல்துறை வடக்கு மண்டல ஐஜி சி. சைலேந்திரபாபு ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், "அந்த இடம் தீப்பெட்டித் தொழிற்சாலை நடத்த உகந்தது அல்ல, தொழிற்சாலையில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, அதில் பாதுகாப்பு கருவிகள் எதுவும் பொருத்தபடவில்லை' என்றனர்.
அப்படியானால், தேவையான பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள் இல்லாத அத்தொழிற்சாலைக்கு உரிமம் வழங்கிய தீயணைப்பு, வருவாய் மற்றும் இதர துறை அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவ்வப்போது ஆய்வு நடத்த வலியுறுத்தல்!
விபத்து நடந்த பின்னர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் அரசின் கடமையல்ல, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவதை முன்னரே அறியும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பல்வேறு நூதன வழிமுறைகளை கையாள்வதாகக் கூறப்படுகிறது. சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகளை வாங்கிவந்து ஆய்வு நடத்தப்படும் தொழிற்சாலைகளில் தாற்காலிகமாக வைக்கப்படுவதாகவும், இதனால் சில பாதுகாப்புக் கருவிகளே பல தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை எனக் கூறி சுமார் 120 தொழிற்சாலைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அரசியல் தலையீடு காரணமாக, இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். எனவே, தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய தனிக் குழுவை அரசு அமைக்க வேண்டும், உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.