பணம், பரிசு வழங்கும் வேட்பாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகும் வாக்காளர்கள்

வேலூர்/வாலாஜாபேட்டை,அக். 16: உள்ளாட்சித் தேர்தலில், தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி வாக்காளர்களை கவர பணம், பரிசு பொருள்களை வேட்பாளர்கள் வழங்கிவருகின்றனர். போட்டிப் போட்டுக் கொண்டு பணம், பொருள்கள்
Updated on
1 min read

வேலூர்/வாலாஜாபேட்டை,அக். 16: உள்ளாட்சித் தேர்தலில், தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி வாக்காளர்களை கவர பணம், பரிசு பொருள்களை வேட்பாளர்கள் வழங்கிவருகின்றனர்.

போட்டிப் போட்டுக் கொண்டு பணம், பொருள்கள் குவிவதால், தீபாவளி கொண்டாட்டத்துக்கு வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.

எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்தனியே களம் இறங்கியுள்ளன. இதனால், உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேநேரத்தில், சுயேச்சைகளும் களம் இறங்கியுள்ளனர்.கடந்த 2 வாரங்களாக வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் பல யுக்திகளைக் கையாண்டு வந்தனர்.

வாக்குறுதிகளை அள்ளி வீசுதல், காலில் விழுந்து வாக்கு சேகரித்தல், மாற்றுக் கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களைத் தங்களுக்கு ஆதரவாக மாற்றுதல், ஆதரவாளர்களைச் சந்தோஷப்படுத்தும் வகையில் உற்சாக பானங்கள் வழங்கல் உள்ளிட்டவற்றை வேட்பாளர்கள் பலரும் கையாண்டு வந்தனர்.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு நாளும் வந்துவிட்டது. இதனால், இறுதிக் கட்ட யுக்தியான வாக்காளர்களுக்குப் பணம், பரிசுகள் வழங்குதலும் நடைபெறுகிறது; நடைபெற்றுகொண்டிருக்கிறது.

எதிரணியில் உள்ள வேட்பாளர்கள் தருவதைக் காட்டிலும், ஒரு பங்கு அதிகப்படுத்தித் தர வேண்டும் என்ற போட்டியும் வேட்பாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதே நேரத்தில், "நாங்கள் குறைவாகக் கொடுத்தாலும், வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு நிறைவாகச் செய்வோம்' என்று வேட்பாளர்கள் வாக்குறுதியை அள்ளிவீசியும் வருகின்றனர்.

"நாங்கள் வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் வார்டில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குவோம்; வார்டில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தால், தனியே எங்கள் சார்பில் நிதியுதவி வழங்குவோம். சொந்தப் பணத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருவோம்..' என கடைசி நேர வாக்குறுதிகளாக வார்த்தைகளால் அள்ளி வீசுகின்றனர்.

வாக்காளர்களுக்கு தலா ரூ.300 முதல் ரூ.500 வரை சில வேட்பாளர்கள் வழங்கிவருகின்றனர். இதுமட்டுமன்றி, சிலர் வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி என்ற பாணியும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், "இது எனது தீபாவளி பரிசு' எனக் கூறி சில வேட்பாளர்கள் வேட்டி, சேலை, புடவை உள்ளிட்ட துணி வகைகளையும் வழங்கி வருகின்றனர்.

இதன்படி, சில வார்டுகளில் சராசரியாக ஒரு வாக்காளர் ரூ.1000 வரை கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சில வார்டுகளில் மிக்ஸி, குக்கர், நான்ஸ்டிக் தவா, வெள்ளி விளக்கு உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. ஆதரவாளர்கள் கை காட்டும் நபர்களுக்கு மட்டும், இரவு நேரங்களில் வீட்டுக் கதவைத் தட்டி இப்பொருள்கள் வழங்கப்படுகிறதாம்.

"யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வது; வாக்கை விரும்பும் நபருக்கு அளிப்பது' என்ற முடிவை வாக்காளர்கள் எடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அக். 26ஆம் தேதி நடைபெறவுள்ள தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பணமும், பரிசுகளும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வாக்காளர்கள் உள்ளனர். இதனால், கடன் வாங்கியும், சீட்டுப் பணம் எடுத்தும் தீபாவளி கொண்டாடுபவர்கள் பணம் கிடைத்துவிட்டதால், கூடுதல் சந்தோஷத்தில் இருப்பதும் உண்மையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com