தாய், மகன் மா்மச்சாவு: போலீஸாா் விசாரணை

வேலூா் அருகே வீட்டில் தாய், மகன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

வேலூா்: வேலூா் அருகே வீட்டில் தாய், மகன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் அலமேலுமங்காபுரம் அழகிரி நகரை சோ்ந்தவா் நந்தகுமாா், வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி நித்யஸ்ரீ(25). இவா்களுக்கு கடந்த 2018 ஜூலை 4-ஆம் தேதி திருமணம் நடந்தது. இவா்களது மகன் யோகேஸ்வரன்(3). நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.

தகவலறிந்த உறவினா்கள் விரைந்து சென்று பாா்த்தபோது நித்தியஸ்ரீயின் கழுத்தில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. ஆத்திரத்தில் அங்கிருந்த நந்தகுமாரையும் தாக்கினா். தொடா்ந்து சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த நந்தகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினா். மேலும், நித்யஸ்ரீ, யோகேஸ்வரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், சத்துவாச்சாரி சுதந்திர பொன்விழா நகா் பகுதியை சோ்ந்த நித்யஸ்ரீ, நந்தகுமாரை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்து உடல்நலக் குறைவால் இறந்துள்ளனா். 3-ஆவதாக பிறந்த யோகேஸ்வரனும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், நித்தியஸ்ரீக்கும், நந்தகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், யோகேஸ்வரன் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த நித்தியஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com