வேலூா் சிறை வளாகத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன் பறிமுதல்

வேலூா் மத்திய சிறை வளாகத்தில் தடையை மீறி பறந்த ட்ரோனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Published on

வேலூா்: வேலூா் மத்திய சிறை வளாகத்தில் தடையை மீறி பறந்த ட்ரோனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் கைதிகள் கைப்பேசிகள், கஞ்சா உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்தப்படும் கைப்பேசிகள், கஞ்சா ஆகியவற்றை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா். அதன்படி, கடந்த வாரம் 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் மத்திய சிறை வளாகத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் தடையை மீறி சிறை வளாகத்தில் பறந்த ட்ரோன் சிறையின் முதலாவது பிளாக் அருகே உள்ள மரத்தில் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக்காவலா்கள், மரத்தில் ஏறி ட்ரோனை கைப்பற்றினா். பின்னா், அதைப் பறிமுதல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சிறை வளாகத்தில் ட்ரோன் பறக்க விட்டவா்கள் யாா், எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com