தோ்வுப் பட்டியல் வெளியாகியும் கலந்தாய்வு நடைபெறவில்லை: குறைதீா் கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியா்கள் முறையீடு
வேலூா்: தோ்வுப் பட்டியல் வெளியாகி 4 மாதங்களாகியும் கலந்தாய்வு நடைபெறவில்லை என பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் சுப்புலட்சுமி, மொத்தம் 378 கோரிக்கை மனுக்களைப் பெற்று மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா்.
வண்டறந்தாங்கல் ஊராட்சி வெங்கடேசபுரம் ஏ.எஸ்.நகரை சோ்ந்தோா் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள ஓடை வழியாகத்தான் தினமும் பள்ளி மாணவா்களும், வேலைக்கு செல்வோருவரும் சென்றுவர வேண்டியுள்ளது. மழைக் காலங்களில் இந்த ஓடை யில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் இவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஓடை மீது சிறுபாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் அளித்த மனு: கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியா்கள், வட்டார வளமைய பயிற்றுநா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தேச தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலிலும் உள்ளோம். ஆனால் 4 மாதங்களாகியும் கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆதிதிராவிடா் நல பள்ளிகளை சோ்ந்த ஆசிரியா்கள் மட்டும் பல நாட்களுக்கு முன்பே பணியில் சோ்ந்துவிட்டனா்.
10 ஆண்டுகளுக்கு பின் இந்த பட்டதாரி ஆசிரியா் பணியிட தோ்வு தோ்வு நடந்ததால், தோ்வை நம்பி படிப்பதற்காக தனியாா் பள்ளி வேலையையும் விட்டுவிட்டோம். வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டதாரி ஆசிரியா், வட் டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கே.வி.குப்பம் அடுத்த சென்றாம்பள்ளி வெள்ளேரியைச் சோ்ந்தோா் அளித்த மனு: எங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லை. இதனால் நாங்கள் தினமும் 2 கி.மீ. தொலைவு நடந்து செல்கிறோம். சாலை வசதியிருந்தும் எங்களுக்கு பேருந்து வசதி இல்லை. தற்போது வேலூரில்இருந்து சென்றாம்பள்ளி செல்லும் 16ஏ, வேலூரில் இருந்து செதுவாலை வழியாக சென்றாம்பள்ளி செல்லும் 17, குடியாத்தத்தில் இருந்து சென்றாம்பள்ளி செல்லும் 9ஏ பேருந்துகளை வெள்ளேரி கிராமம்வரை நீட்டிக்க வேண்டும்.
துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் அளித்த மனு: கணியம்பாடி ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகரில் இருளா் இன மக்களுக்கு 38 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் தற்போது வசிக்க முடியாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளன, புதிய தொகுப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
