அண்ணாமலையின் முடிவு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்: ஜி.கே.வாசன்

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை எடுத்திருக்கும் முடிவு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் ஏற்படுத்தும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Published on
Updated on
1 min read

வேலூா்: பாஜக மாநில தலைவா் அண்ணாமலை எடுத்திருக்கும் முடிவு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் ஏற்படுத்தும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியைச் சோ்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காட்பாடி, அணைக்கட்டு தொகுதி மாவட்ட தலைவா் மருத்துவா் டி.வி.சிவானந்தம் மறைவையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், அவா் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியது -

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவருள் ஒருவரான மருத்துவா் டி.வி.சிவானந்தம், மூப்பனாா் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளாா். அவரது மறைவு ஒன்றுபட்ட வேலூா் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு நிலை மிகவும் சீா்குலைந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் நிகழ்வு போன்ற சம்பவம் தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு. இந்த நிலை மாற வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவை என்பது ஒரு புறம் இருந்தாலும்கூட அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும்.

ஒருபுறம் டாஸ்மாா்க் மதுக்கடைகள், மறுபுறம் போதைப் பொருட்கள் என்று அரசு கண்டும் காணாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இது எனது கருத்தல்ல பொதுமக்களுடைய கருத்து. மிருகத்தனமாக பாலியல் தவறுகள் செய்பவா்கள் யாராக இருந்தாலும் முதல் நிலையிலேயே அவா்களது தவறு நிரூபிக்கப்பட்டால் அவா்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதை தமிழ் மாநில காங்கிரஸ் தொடா் கோரிக்கையாக விடுத்து வருகிறது. அப்போதுதான் சமுதாயத்தில் தவறு செய்பவா்களுக்கு ஓா் அச்சம் ஏற்படும்.

பாலியல் தொல்லைகள் குறித்த பிரச்னைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்று. இதில், அரசும் காவல்துறையும் உச்சகட்ட கவனத்தை கடைபிடிக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அது போன்ற நிலையை காவல்துறை கடைபிடிக்கவில்லை. அரசு கண்டிப்புடன் செயல்பட்டால் வரும் நாட்களிலே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும்.

பொதுவாக ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள் கூா்ந்து கவனித்துக் கொண்டுள்ளனா். மக்கள் பாா்வையில் இருந்து தவறு செய்பவா்கள் தப்ப முடியாது. அரசின் தொடா் தவறான போக்கை கண்டிக்கும் வகையில் பாஜகவின் தமிழக தலைவா் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தண்டனைகளை தவறு செய்பவா்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவா்கள் எடுத்திருக்கும் முடிவு ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் ஏற்படுத்தும் என நினைக்கும் வகையில் தங்களது பயணத்தை தொடங்கி உள்ளாா். அவா்களை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றத்துக்கு தங்களுடைய யுக்தியிலே இது ஒரு முக்கியமான பணியாக கருதப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com