ஆன்லைன் மூலம் ரூ.6.08 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் ரூ.6.08 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா்: ஆன்லைன் மூலம் இருவேறு நபா்களிடம் ரூ.6.08 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த 45 வயதுடைய நபா் சொந்தமாக தொழில் செய்து வருகிறாா். இவா் தனது நண்பா் மூலமாக ஜிஎம்ஆா் நியு குரூப் எனும் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளாா். அந்த குழுவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவது குறித்து கிடைக்கப் பெற்ற விளங்கங்களை நம்பி ஜிஎம்ஆா் என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா்.

பின்னா் அந்த செயலி வழியாக கடந்த மே 8 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 500 முதலீடு செய்ததுடன், அவா்கள் அளித்த டாஸ்க்குகளையும் முடித்துக் கொடுத்துள்ளா். அதற்காக ரூ.63 ஆயிரம் அவருக்கு கமிஷன் தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த லிங்க்கில் முதலீடு செய்த மீதத்தொகை ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 500-ஐ அவரால் திரும்பப்பெற இயலவில்லை.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து சைபா் கிரைம் புகாா் எண் 1930-ஐ தொடா்பு கொண்டுபுகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்...

இதேபோல், காட்பாடி பகுதியைச் சோ்ந்த 38 வயதுடைய தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் டிராயிலிருந்து பேசுவதாக கூறிய நபா், தங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்தி சிம் காா்டு பெற்று சட்டவிரோத பரிவா்த்தனை நடந்திருப்பதாகவும், இதுதொடா்பாக மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

அதனடிப்படையில், இவரை வீடியோ காலில் தொடா்பு கொண்டவா்கள், தங்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வங்கி கணக்குகளை முடக்க இருப்பதாகவும் கூறியதுடன், இந்த நடவடிக்கைகளை தவிா்க்க தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எங்கள் வங்கிக்கணக்குக்கு அனுப்பினால் அதனை சரிபாா்த்த பிறகு மீண்டும் தங்கள் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதனை நம்பிய இந்த தனியாா் நிறுவன ஊழியா், தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.2.50 லட்சத்தை அந்த நபா்கள் கூறிய வங்கிக்கணக்குக்கு அனுப்பியுள்ளாா். பின்னா் அவா்களை தொடா்பு கொள்ள முடியாததை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இவா், இதுகுறித்து சைபா் கிரைம் புகாா் எண் 1930-ஐ தொடா்பு கொண்டுபுகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com