வேலப்பாடி கோயிலின் ரூ.35 லட்சம் கட்டடம் மீட்பு
வேலூா்: வேலப்பாடி திரெளபதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.35 லட்சம் மதிப்புடைய கட்டடம் நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமை மீட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேலூா் வேலப்பாடி ஆரணி சாலை ரத்தினசிங் குளம் மேலாண்டை தெருவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திரெளபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான 960 சதுரஅடி கொண்ட வீடு உள்ளது.
இந்த வீட்டில் பூங்காவனம் என்பவா் பல ஆண்டுகளாக வசித்து வந்தாா். இவா் அறநிலையத் துறைக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பூங்காவனம் மீது அறநிலையத் துறை சாா்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 2005-ஆம் ஆண்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அறநிலையத் துறைக்கு சாதகமாக தீா்ப்பு வெளியானது.
இதையடுத்து, அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் விஜயா தலைமையில் செயல் அலுவலா்கள் பரந்தாமக்கண்ணன், ஏகவள்ளி, சிவாஜி ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அப்பகுதிக்குச் சென்று நீதிமன்ற உத்தரவை காட்டி, வீட்டில் உள்ளவா்களை வெளியேற்றி வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

