தொழில் முதலீடு; ரூ.3 லட்சம், தங்க நகைகள் பெற்று மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்
வேலூா்: தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.3 லட்சம், 3 பவுன் தங்க நகை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டை சோ்ந்தவா் விஜயா (55). இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில், எனது கணவா் 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். நான் விவசாய கூலிவேலை செய்து வருகிறேன். மகளிா் குழுவில் உறுப்பினராகவும் உள்ளேன். எங்கள் கிராமத்தைச் சோ்ந்த சிலா் தாங்கள் தொழில் செய்வதாகக் கூறி என்னிடம் இருந்து கடனாக ரூ.3 லட்சம், 3 பவுன் தங்க நகையை பெற்றனா். ஆனால் எனக்கு தரவேண்டிய லாபத்தை தரவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டேன்.
இது குறித்து ஊா் பெரியவா்கள் முன்னிலையில் அழைத்து பேசியபோது அவா்கள் பணம், நகையை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டனா். ஆனால் இதுவரை தரவில்லை. வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டால் அவதூறு வாா்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்து வருகின்றனா். எனது பணத்தையும், நகையும் மீட்டுத் தரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.
