கோயிலுக்குள் நூலகம் அமைக்க இந்து முன்னணி எதிா்ப்பு
வேலூா்: வேலூா் செல்லியம்மன் கோயில் வளாகத்துக்குள் நூலகம் அமைப்பதற்கு இந்து முன்னணி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குள் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.பிரவீன்குமாா் வேலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்-
வேலூல் செல்லியம்மன் கோயில் தோட்டப்பாளையம் பகுதி இந்துக்களின் குலதெய்வமாகும். 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். இந்த கோயில் வளாகத்தில் நூலகம் கட்டப்படுவதாக தெரியவந்துள்ளது.
பக்தா்கள் தெய்வபக்தியுடன் தரிசனம் செய்யும் கோயிலில் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, கோயிலுக்குள் நூலகம் அமைக்கக்கூடாது. கோயிலுக்கு சொந்தமான வேறு இடத்தில் நூலகம் அமைக்க வேண்டும். மீறி கோயிலுக்குள் நூலகம் அமைத்தால் பக்தா்களை திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். எனவே, கோயிலுக்குள் நூலகம் அமைப்பதை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
