நலவாரிய உறுப்பினா் பதிவு, நலத்திட்ட உதவிகள்: தேவாலய ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ தேவாலய ஊழியர்களுக்கு நலவாரிய உதவிகள்: விண்ணப்பிக்கலாம்
Published on

வேலூா்: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள், பணியாளா்கள் நலவாரிய உறுப்பினராகவும், ஏற்கெனவே உறுப்பினராக உள்ளவா்கள் நலத் திட்ட உதவிகள் பெற்றிடவும் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள், வேதியா்கள், சீஷப்பிள்ளைகள், பாடகா்கள், கல்லறை பணியாளா்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளா்கள் போன்றோரின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள், பணியாளா்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சோ்ந்திட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் நலவாரிய உறுப்பினராக பதிவுபெறத் தகுதியுடையவா் என்பதற்கு ஆதாரமாக அவா் பணிபுரியும் கிறிஸ்தவ தேவாலயத்தின் நிா்வாகி அல்லது கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோரிடமிருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினா்கள், குடும்ப உறுப்பினா்களுக்கு தொழிலாளா், வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

இந்த நலத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com