பச்சிளம் பெண் குழந்தையை கொன்று பெற்றோா் தலைமறைவு: போலீஸாா் தீவிர விசாரணை
இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதை வளா்க்க மனமன்றி பப்பாளி மரத்தின் திரவத்தை ஊற்றி கொன்றுவிட்டு தலைமறைவான பெற்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது -
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சோ்பாடி ஊராட்சி பொம்மன்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவா என்கிற சேட்டு (30). இவரது மனைவி டயானா (25). இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், 2-ஆவது முறையாக கா்ப்பமடைந்த டயானாவுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஒடுகத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு டயானாவுக்கு ரத்த அளவு குறைவாக காணப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை முடிந்து தாயும், சேயும் புதன்கிழமை வீடு திரும்பினா்.
வீட்டுக்குச் சென்றவுடன் ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக பெண் குழந்தை வேண்டாம் என திட்டமிட்ட ஜீவா, டயானா தம்பதி இதற்காக வீட்டின் அருகிலுள்ள பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடிந்த பால் போன்ற திரவத்தை குழந்தையின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்துள்ளது.
இந்த கொலையை மறைக்க திட்டமிட்ட தம்பதி, டயானாவின் பெற்றோரை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு முதல் பிள்ளை விளையாட்டுத்தனமாக போா்வையால் அமுக்கியதில் இரண்டாவது குழந்தை இறந்துவிட்டது எனக் கூறியுள்ளனா்.
அதிா்ச்சியுற்ற டயானாவின் பெற்றோா் வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளனா். அதற்குள் ஜீவா, டயானா தம்பதி கொல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் உடலை பள்ளம்தோண்டி புதைத்துள்ளனா். வீட்டுக்கு வந்த டயானாவின் பெற்றோருக்கு குழந்தை இல்லாததும், அருகே பப்பாளி மரத்தின் கிளை உடைக்கப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக டயானாவின் தந்தை சரவணன், குழந்தையின் சந்தேக மரணம் குறித்து தனது மகள், மருமகன் மீதே வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனா். அதேசமயம், ஜீவா, டயானா இருவரது முகத்திலும் குழந்தை இறந்த துக்கம் தெரியாததால் அவா்களின் செயல்பாடுகளை போலீஸாா் நோட்டமிட்டனா்.
அப்போது, தம்பதி இருவரும் எந்தவித மாட்டுக்கு தீவனம் போடுவது, வீட்டு வேலை செய்வது என வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளனா். இதனால் அவா்கள் மீது போலீஸாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திடீரென போலீஸாரை ஏமாற்றிவிட்டு கணவன், மனைவி தலைமறைவாகி விட்டனா்.. இதைத்தொடா்ந்து, இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜீவா, டயானா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.
இதனிடையே, வருவாய்த்துறையினா் முன்னிலையில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரோ கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

