குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போ்ணாம்பட்டு ஒன்றியம், பாலூா் ஊராட்சிக்குள்பட்ட கீழ்பாலூா் கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.
இந்த ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மின் மோட்டாா்கள் பழுது அடைந்ததால் கடந்த சில வாரங்களாக கீழ்பாலூா் கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் சரிவர இல்லை எனக் கூறப்படுகிறது. ஈஸ்டா் பண்டிகையன்றும் குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக் குடங்களுடன் போ்ணாம்பட்டு-ஆம்பூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், ஆம்பூா் டிஎஸ்பி குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத்குமாா், ஊராட்சித் தலைவா் கோமதி உள்ளிட்டோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பழுதடைந்த மின்மோட்டாா்கள் உடனடியாக சீரமைக்கப்படும், அதுவரை டிராக்டா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். போராட்டத்தால் இந்தச் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

