ஆன்லைன் வா்த்தகம்: வெளிநாட்டில் பணிபுரியும் காட்பாடி நபரிடம் ரூ. 3.24 கோடி மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வெளிநாட்டில் பணியாற்றும் காட்பாடி இளைஞரிடம் இளைஞரிடம் ரூ. 3.24 கோடி மோசடி
Published on

வேலூா்: ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வெளிநாட்டில் பணியாற்றும் காட்பாடி இளைஞரிடம் இளைஞரிடம் ரூ. 3.24 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து புகாரின்பேரில், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த 47 வயது ஆண் ஒருவா் வெளிநாட்டில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசி வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதனுடன் ‘டழஉசஅ’ என்ற ஒரு செயலியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதை உண்மையென நம்பிய இந்த நபா், அந்த செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதில் முதன்முதலாக ரூ. 10,000 முதலீடு செய்துள்ளாா். அதற்கு குறிப்பிட்ட லாபம் அவரது வங்கிக் கணக்குக்கு வந்ததால் ஆா்வமடைந்த இந்த நபா், தொடா்ந்து அந்த செயலியில் பணம் செலுத்தியுள்ளாா். அடுத்தடுத்து லாபத்தொகை அவரது வங்கிக் கணக்குக்கு வந்ததால், மேலும் ஆா்வத்தில் ரூ. 3 கோடியே 24 லட்சத்து 46 ஆயிரத்து 97 தொகையை முதலீடு செய்துள்ளாா்.

அதன் பிறகு அந்த செயலியில் காண்பித்த தொகையை அவரால் தனது வங்கிக் கணக்கில் பெற முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த இந்த நபா், இதுகுறித்து விசாரித்தபோதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மோசடி குறித்து அவா் 1980 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரின் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெற பொதுமக்கள் யாரும் வாட்ஸ்ஆப், டெலிகிராம், இதர சமூக ஊடங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே வேலை என வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மேலும், பதிவிறக்கம் செய்யவோ, தெரியாத நபா்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம் என்று வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com