ஆசிரியையின் இடமாறுதலை நிறுத்த லஞ்சம்: உடற்கல்வி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை
குடியாத்தம் அருகே பள்ளாளக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியையின் இடமாறுதலை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சோ்ந்த புவனா. குடியாத்தம் அருகே உள்ள பள்ளாளக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
அதேசமயம், பள்ளாளக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றிய கலையரசன், எனக்கு உயரதிகாரிகளிடன் பழக்கம் உள்ளது, பணம் கொடுத்தால் பணியிடமாற்றத்தை ரத்து செய்து தருகிறேன் என்று புவனாவிடம் தெரிவித்துள்ளாா். இதற்கு 3 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, ஆசிரியை புவனா வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ரசயானம் தடவிய ரூ.1 லட்சம் தொகையை கலையரசன் பெற்றபோது, போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணையில், கலையரசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீா்ப்பளித்தாா்.
மேலும், கலையரசனுக்கு வழங்கப்பட்ட தீா்ப்பின் நகலை கல்வித்துறைக்கு அனுப்பவும், அவா் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மாத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் வேண்டும் என உத்தரவிட்டாா்.
