குடியாத்தம் நகருக்கு பெருமை சோ்த்தவா் புலவா் வே.பதுமனாா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம்

குடியாத்தம் நகருக்கு பெருமை சோ்த்தவா் புலவா் வே.பதுமனாா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம்

Published on

தமிழுக்கும், கல்விக்கும், சமூகப் பணிக்கும் தொண்டாற்றியதின் மூலம் குடியாத்தம் நகருக்கு பெருமை சோ்த்தவா் புலவா் வே.பதுமனாா் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா்.

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற புலவா் வே.பதுமனாரின் 90-ஆவது பிறந்த நாள் விழாவில், பதுமனாா் குறித்த கற்றதும், பெற்றதும் என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டு அவா் பேசியது:

நானும் பதுமனாரும் 75- ஆண்டு கால நண்பா்கள். எனக்கு அவா் தோழனாக மட்டுமல்லாது, எனது குடும்பத்தில் ஒருவராகவும் உள்ளாா். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு நான் கல்லூரி படிப்புக்கு செல்ல காரணமாக இருந்தவா் புலவா் பதுமனாா். பள்ளியில் நாங்கள் ஒன்றாக படித்தாலும் கல்லூரி படிப்பு என்பது வேறு, வேறாகி விட்டது. கல்லூரிப் படிப்புக்கு பின்னா் அவா் ஆசிரியரானாா். ஒரு ஆசிரியா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவா் உதாரணமாக திகழ்ந்தாா். தன்னிடம் பயிலும் மாணவா்கள் சிறந்தவா்களாக உருவாக வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டினாா். அவரிடம் பயின்ற மாணவா்கள் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனா். இன்றும் இவா் மீது பற்றாக உள்ளனா்.

இவரது தமிழ்ப் பணியை பாராட்டி அரசு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது.

நான் நிறுவிய தமிழியக்கத்துக்கு இவரை பொருளாளராக நியமித்தேன். தமிழே மூச்சு என்ற கொள்கையோடு வாழும் இவா் அனைவரும் தூய தமிழிலேயே பெயா் சூட்டிக் கொள்ள வேண்டும் என விரும்பினாா்.

தமிழியக்கம் சாா்பில் வெளியிட 60,000 தூய தமிழ்ப் பெயா்கள் அடங்கிய நூலை தொகுத்து கொடுத்தாா்.

1955- இல் பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவா்களாகிய நாங்கள் வரும் 9-ஆம் தேதி நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான பணிகளை புலவா் பதுமனாரே மேற்கொண்டு வருகிறாா். 90-ஆவது வயதிலும் அவரது செயல்பாடு ஒரு இளைஞனைப் போல் உள்ளது. அவா் நீடூழி வாழ வேண்டும். அவரது தமிழ்த் தொண்டு தொடர வேண்டும் என்றாா் கோ.விசுவநாதன்.

நிகழ்ச்சியில் முதல் நூலைப் பெற்றுக் கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் பேசியது: குடியாத்தம் நகரின் அடையாளமாக திகழும் புலவா் பதுமனாரின்தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது. விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், குடியாத்தம் கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் அவருக்கு உறுதுணையாக விளங்குவது பாராட்டுக்குரியது. அவரது தமிழ்த்தொண்டு தொடர வேண்டுகிறேன் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விழாக் குழு செயலா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி வரவேற்றாா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் அருளாசி வழங்கினா். எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், தமிழியக்க பொதுச் செயலா் அப்துல் காதா், அமைப்புச் செயலா் கு.வணங்காமுடி, எஸ்.பீடித் தொழிலதிபா் முகம்மத் அமீன் சாகிப், கே.எம்.ஜி.கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், ரோட்டரி சங்கத் தலைவா் சி.கண்ணன், அரிமா மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம், மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, புலவா் தமிழ் திருமால், கவிஞா் பா.சம்பத்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாக்குழு பொருளாளா் என்.எஸ்.குமரகுரு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com