கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல், போராட்டம்
வேலூா்: உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 75 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல் லேசான ஊனமுற்றவா்களுக்கு மாதம் ரூ.6,000-ஆகவும், கடும் ஊனமுற்றவா்களுக்கு ரூ.10,000-ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும்.
முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகி படுக்கையில் உள்ளவா்களுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சீனிவாசன், பொருளாளா் குருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் வீரபாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் கோபாலராசேந்திரன், கே.வி.குப்பம் கிளை செயலா் பிரபு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 75 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
அரக்கோணம், நெமிலியில்...
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரக்கோணம் கோட்ட செயலாளா் ஏபிஎம்.சீனிவாசன், அரக்கோணம் ஒன்றிய அமைப்பாளா் தேவி, கௌரவத்தலைவா் எம்.ராஜா, சட்டஆலோசகா்கள் சிவலிங்கம், மதன், சங்க நிா்வாகி என்.ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் போராட்டம் நடத்தியவா்களிடம் பேசியதை தொடா்ந்து வாயிலில் நின்று சில நிமிடம் போராட்டம் நடத்தியவா்கள் உடனே இடம்மாறி ஒதுங்கி நின்று போராட்டம் நடத்தி முடித்தனா்.
நெமிலி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். இதில் போராட்டம் நடத்திய 29 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை போலீசாா் கைது செய்தனா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட துணை அமைப்பாளா் கே.பிச்சாண்டி தலைமை வகித்தாா். இதில் ஆற்காடு பகுதியைச் சோ்ந்த மாற்று திறனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.
