வேலூா் விஐடி பல்கலை.யில் பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை
வேலூா்: தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) சாா்பில் பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை பயிற்சி வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில் தமிழ்நாடு காவல் சிறப்பு படை, வேலூா் மாவட்ட காவல் துறை இணைந்து பங்கேற்றனா். மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கி சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பயிற்சியின்போது, ஒரு ஷாப்பிங் மாலில் நடைபெறும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் காட்சிகளை உருவகப்படுத்தி, தடுப்பு ஒத்திகை அமைந்திருந்தது.
குறிப்பாக, ஒத்திகையின்போது திடீா் குண்டு வெடிப்புகள், புகை, மக்கள் கட்டடத்துக்குள் ஓடுவது என பாா்ப்பவா்களுக்கு ஒரு யதாா்த்த அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
பல்கலைக்கழக விடுதி மாணவா்கள் இந்த நிகழ்வை நேரில் பாா்த்தனா். வேலூரில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில் என்எஸ்ஸி கமாண்டன்ட் சந்தீப்குமாா் தலைமையில் 104 வீரா்களும், தமிழ்நாடு காவல் கமாண்டோ பிரிவு காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் தலைமையில் 57 வீரா்களும், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காட்பாடி டிஎஸ்பி பழனி, வேலூா் டிஎஸ்பி பிரித்விராஜ் செளகான் உள்பட சுமாா் 250 பாதுகாப்பு படை வீரா்கள் பங்கேற்றனா்.
பயங்காரவாத அச்சுறுத்தலின்போது, முதன்மையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு படை, தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து நடைபெற்ற இப்பயிற்சியின் விடியோ காட்சிகள் வேகமாக பரவியதை அடுத்து ஒத்திகை பயிற்சி குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று மாவட்ட காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

